காதலன் பலாத்காரம் செய்ததால் மைனர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது அம்பலம்
கொப்பல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறையில் பெண் சிசு உடல் கிடந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலன் பலாத்காரம் செய்ததால் மைனர் பெண்ணுக்கு அந்த சிசு பிறந்திருந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கொப்பல்:-
மைனர் பெண்
கொப்பல் டவுனில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவ வார்டில் உள்ள கழிவறையில் பச்சிளம் பெண் சிசுவின் உடல் கிடந்தது. இதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் குஷ்டகி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண் சிசுவின் உடலை கைப்பற்றினர். பின்னர் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது ஒரு மைனர் பெண்ணை அவரது தாய் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததும், பின்னர் அந்த மைனர் பெண், தனது தாயுடன் ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த மைனர் பெண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மைனர் பெண் பகீர்கவுடா பட்டீல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
பாலியல் பலாத்காரம்
அதன்பேரில் திருமண ஆசை வார்த்தைகள் கூறி அந்த மைனர் பெண்ணை, பகீர்கவுடா பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால் மைனர் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். மைனர் பெண் கர்ப்பம் அடைந்ததும் தெரிந்ததும் அவரை திருமணம் செய்ய மறுத்து பகீர்கவுடா தலைமறைவாகி விட்டார். இதனால் மனமுடைந்த மைனர் பெண் இதுபற்றி தனது தாயிடம் தெரிவித்து இருக்கிறார்.
அதன்பேரில் அவரது தாய் மைனர் பெண்ணை பிரசவத்திற்காக கொப்பல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பிரசவ வலி அதிகமானதால் மைனர் பெண் கழிவறைக்கு சென்றிருக்கிறார்.
கைது
அப்போது அவருக்கு கழிவறையிலேயே குழந்தை பிறந்துள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த மைனர் பெண் இதுபற்றி தனது தாயிடம் தெரிவித்து இருக்கிறார். உடனே அவர் கழிவறைக்கு சென்று சிசுவை பார்த்திருக்கிறார். பின்னர் யாரிடமும் இதுபற்றி சொல்ல வேண்டாம் என்று மகளிடம் கூறி அங்கிருந்து மகளுடன் நைசாக வெளியேறி இருக்கிறார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பகீர்கவுடா பட்டீலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மைனர் பெண் அந்த சிசுவை கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.