விபத்தில் 4 பேர் பலியான வழக்கில் ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
சுங்கச்சாவடி தூண் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 4 பேர் பலியான வழக்கில் டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர், குடிபோதையில் ஆம்புலன்சை ஓட்டியது அம்பலமாகியுள்ளது.
மங்களூரு: சுங்கச்சாவடி தூண் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 4 பேர் பலியான வழக்கில் டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர், குடிபோதையில் ஆம்புலன்சை ஓட்டியது அம்பலமாகியுள்ளது.
ஆம்புலன்ஸ் விபத்தில் 4 பேர் பலி
உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா சிரூர் சுங்கச்சாவடி தூண் மீது நேற்று மாலை ஆம்புலன்ஸ் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உள்பட 4 பேர் பலியானார்கள்.நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விபத்து வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விபத்து குறித்து பைந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.
விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவர் அருகே அடகேரியை சேர்ந்த லட்சுமண நாயக், அவரது மனைவி ஜோதி நாயக் மற்றும் உறவினர்கள் மகாதேவ நாயக், லோகேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட லட்சுமண நாயக்கை, அவரது குடும்பத்தினர் மேல்சிகிச்சைக்காக குந்தாப்புராவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. மேலும் விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ரோஷன், சுங்கச்சாவடி ஊழியர் சம்பாஜி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிரைவர் கைது
இந்த நிலையில் பைந்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் ரோஷன், ஆம்புலன்சை வேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. மேலும் ஆம்புலன்ஸ், சரியான பராமரிப்பு இல்லாததும் தெரியவந்தது. இதற்கிடையே ஆம்புலன்சுக்குள் சோதனை நடத்தியதில் டிரைவர் சீட்டு அருகே மதுபாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர் ரோஷனின் ரத்தமாதிரியை எடுத்து மணிப்பால் ஆஸ்பத்திரியில் சோதனை செய்யப்பட்டது. அதில், டிரைவர் ரோஷன் மதுபோதையில் ஆம்புலன்சை ஓட்டியது உறுதியானது. இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.