திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் இணைந்திருப்பது தோல்வியை ஒப்புக்கொள்வதாக அர்த்தம் அமித்ஷா சொல்கிறார்


திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் இணைந்திருப்பது தோல்வியை ஒப்புக்கொள்வதாக அர்த்தம் அமித்ஷா சொல்கிறார்
x
தினத்தந்தி 13 Feb 2023 3:45 AM IST (Updated: 13 Feb 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் கட்சிகள் இணைந்திருப்பது, பா.ஜனதாவிடம் தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது என்று அமித்ஷா கூறினார்.

அகர்தலா,

திரிபுரா சட்டசபை தேர்தல் இம்மாதம் 16-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தநிலையில், உனகோடி மாவட்டம் சந்திப்பூரில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், திப்ரா மோத்தா ஆகிய கட்சிகள், திரிபுராவுக்கு மும்முனை தொந்தரவுகளாக இருக்கின்றன. அந்த கட்சிகள் ஆட்சியை பிடித்தால், காட்டாட்சி திரும்பி விடும். அவை ஆட்சியில் இருந்தபோது, ஊழல்கள் நிறைந்து காணப்பட்டன.

அவற்றிடம் இருந்து திரிபுராவை பாதுகாக்க வேண்டுமானால், இரட்டை என்ஜின் பா.ஜனதா அரசால்தான் முடியும். எனவே, பா.ஜனதாவை ஆதரியுங்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நீண்ட காலமாக பழங்குடியினருக்கு துரோகம் செய்து வந்தது. தற்போது, அம்மக்களை ஏமாற்றுவதற்காக, ஒரு பழங்குடியின தலைவரை முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் இணைந்திருப்பது, பா.ஜனதாவிடம் தங்கள் தோல்வியை சூசகமாக ஒப்புக்கொள்வது போல் இருக்கிறது. உலகத்தில் எங்குமே கம்யூனிசம் இல்லை. இந்தியாவில் காங்கிரசுக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story