சிறுத்தை தாக்கி 11 வயது சிறுவன் சாவு; மற்றொரு இடத்தில் வாலிபரை புலி அடித்து கொன்றது


சிறுத்தை தாக்கி 11 வயது சிறுவன் சாவு; மற்றொரு இடத்தில் வாலிபரை புலி அடித்து கொன்றது
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டி.நரசிப்புராவில் சிறுத்தை தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்தான். எச்.டி.கோட்டையில் வாலிபர் ஒருவரை புலி அடித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

ைமசூரு:

சிறுத்தை அட்டகாசம்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால், வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

அந்த சிறுத்தைகள், ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவதுடன் மனிதர்களையும் தாக்கி வருகிறது. டிநரசிப்புரா தாலுகாவில் கடந்த 4 மாதங்களில் 3 பேரை சிறுத்தை கொன்றிருந்தது. இந்த நிலையில் டி.நரசிப்புராவில் சிறுத்தை தாக்கி 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

சிறுவனை கொன்றது

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ஹொரலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவன் ஜெயந்த் (வயது 11). இவனது வீடு வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் ஜெயந்த், நேற்று முன்தினம் இரவு பிஸ்கெட் வாங்க கடைக்கு சென்றுள்ளான். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி உள்ளது. சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயந்த், அங்கிருந்து தப்பியோட முயன்றான். ஆனாலும் அதற்குள் சிறுத்தை அவன் மீது பாய்ந்து கடித்து குதறியது. மேலும் அவனை கொன்று உடலை வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது.

இந்த நிலையில் கடைக்கு சென்ற ஜெயந்த் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அவனை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.

வனப்பகுதியில் உடல்

இந்த நிலையில் நேற்று காலை அவனது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் ஒரு புதருக்குள் ஜெயந்தின் உடல் கிடந்தது. பாதி உடலை சிறுத்தை தின்றிருந்தது. இதுபற்றி அறிந்ததும் கிராம மக்களும், வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஜெயந்தை சிறுத்தை தாக்கி கொன்று உடலை வனப்பகுதிக்குள் போட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்து சிறுவனை அடித்து கொன்று உடலை இழுத்து சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

சாலை மறியல்

இந்த நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, கிராம மக்கள் டி.நரசிப்புரா-சாம்ராஜ்நகர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், டி.நரசிப்புரா தாலுகாவில் சிறுத்தைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. சிறுத்தையை பிடிக்க வேண்டும் அல்லது சுட்டு கொல்ல வேண்டும் என்றனர்.

இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த போராட்டத்தால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புலி தாக்கி வாலிபர் சாவு

இதேபோல், எச்.டி.கோட்டை தாலுகாவில் புலி தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நேற்று நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா அந்தரசந்தே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு (வயது 18). இவர் நேற்று தனது நண்பர்கள் சிலருடன் கிராமத்தையொட்டி உள்ள நாகரஒலே வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு புலி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி அடித்து ஓடினார்கள். ஆனால் மஞ்சு மட்டும் புலியின் பிடியில் சிக்கி கொண்டார். அவரை புலி, அடித்து கொன்று உடலை இழுத்து சென்றது. இதுபற்றி அவரது நண்பர்கள் கிராம மக்களிடமும், வனத்துறையினரிடமும் தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு பாதி உடலுடன் மஞ்சு பிணமாக கிடந்தார். பாதி உடலை புலி தின்றது தெரியவந்தது.

வனத்துறையினர் தீவிர நடவடிக்கை

இதையடுத்து அந்தரசந்தே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புலி தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவத்தால் அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், புலி தாக்கி உயிரிழந்த வாலிபரின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும், அந்த புலிைய பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

வாலிபரை கொன்ற புலியையும், சிறுவனை கொன்ற சிறுத்தையையும் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

டி.நரசிப்புரா, எச்.டி.கோட்டையில் சிறுத்தை மற்றும் புலி தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story