வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தையை கடத்த முயற்சி


வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தையை கடத்த முயற்சி
x

மலவள்ளி அருகே வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்ற முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:-

குழந்தையை கடத்த முயற்சி

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கிறுகவாலு கிராமத்தை தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், அந்த தம்பதியின் 5 வயது குழந்தை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தது. அந்த சமயத்தில் முகமூடி அணிந்து 2 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தையை வாயை பொத்தி மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்ல முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தை, கத்தி கூச்சலிட்டுள்ளது. குழந்தையின் கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால், மர்மநபர்கள் கடத்தல் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

நோட்டம்

இதையடுத்து குழந்தையை மீட்ட அந்தப்பகுதி மக்கள், உடனடியாக மலவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், குழந்தையை கடத்த முயற்சி செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரும் ஏற்கனவே அந்தப்பகுதிக்கு சென்று நோட்டமிட்டது தெரியவந்துள்ளது. அதாவது முதலில் வியாபாரி போல வந்த அவர்கள், மாலையில் மோட்டார் சைக்கிளில் அந்த தெருவில் சுற்றி திரிந்துள்ளனர். அந்த பகுதியை நன்கு நோட்டமிட்டு அவர்கள் இரவு நேரத்தில் வந்து கடத்தல் திட்டத்தை அரங்கேற்ற முயன்றது தெரியவந்தது.

போலீஸ் வலைவீச்சு

இந்த சம்பவத்தால் கிறுகவாலு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மலவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story