காா் திருட்டு போனதாக நாடகமாடிய தனியார் நிறுவன ஊழியர் கைது


காா் திருட்டு போனதாக நாடகமாடிய தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காப்பீட்டு தொகையை பெறுவதற்காக கார் திருட்டு போனதாக நாடகமாடிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்தவரும் சிக்கினார்.

சிவமொக்கா:-

போலீசில் புகார்

சிவமொக்கா மாவட்டம் துங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2022-ம் ஆண்டு சொந்தமாக கார் ஒன்றை வாங்கினார். அதற்காக நிதி நிறுவனம் மூலம் மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் சூளேபயிலு பகுதிக்கு சென்ற அவர் அந்த பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் சாலையில் நிறுத்தியிருந்த தனது காரை மர்மநபர்கள் திருடி சென்றதாக துங்காநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கார் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சந்திரகுமார் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கிடுக்கிப்பிடி விசாரணை

இதையடுத்து அவரை ரகசியமாக பின்தொடர்ந்தனர். இந்த நிலையில் சந்திரகுமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சந்திரகுமார் சொந்தமாக கார் வாங்கி உள்ளார்.

இதற்காக அவர் மாதந்தோறும் நிதி நிறுவனத்திற்கு தவணை தொகையை செலுத்தி வந்துள்ளார். ஆனால் அவரால் அதை தொடர்ந்து செலுத்த முடியவில்லை. இதனால் கார் திருட்டுபோனதாக பொய் புகார் அளிக்க முடிவு செய்தார். அப்போது தான் காருக்கு செலுத்திய காப்பீட்டு தொகை முழுவதுமாக கிடைக்கும் என நினைத்துள்ளார்.

2 பேர் கைது

இதையடுத்து அவர் தனது நண்பரான தாவணகெரேவை சேர்ந்த பிரசாந்த் (29) என்பவருடன் சேர்ந்து தனது காரை அந்த பகுதியில் கொண்டுபோய் மறைத்து வைத்துள்ளார். பின்னர், அவர் தனது கார் திருடப்பட்டதாக நாடகமாடி உள்ளது தெரிந்தது.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் அவர் கார் திருட்டுபோனதாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து சந்திரகுமார் மற்றும் பிரசாந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மறைத்து வைத்திருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story