சிராளகொப்பாவில் சுவரில் எழுதிய வாசகம் குறித்து விசாரணை
சிராளகொப்பாவில் சுவரில் எழுதிய வாசகம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா:-
சுவரில் வாசகம்
சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா சிராளகொப்பா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையோர சுவர்களில் சி.எப்.ஐ. அமைப்பில் சேரும்படி வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வாசகம் அந்தப்பகுதியில் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால், போலீசார் அதனை அழித்தனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் சிகாரிபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த வந்தனர். அதில் இந்த வாசகம் 3 மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்து என்று தெரியவந்தது. தற்போது யாரும் எழுதவில்லை என்று கூறப்படுகிறது.
விசாரணை
இதுகுறித்து நேற்று நிருபர்களை சந்தித்து பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் கூறும்போது:- சிவமொக்காவில் பயங்கரவாதி ஷாரிக் தங்கியிருந்த தகவல் கிடைத்தப்பின்னர் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல சி.எப்.ஐ. அமைப்பில் சேரும்படி சிலர் சுவர்களில் எழுதி மக்களின் கவனத்தை திருப்புவதாக தகவல் கிைடத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டேன். மேலும் அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தோம். அது புதிதாக எழுதப்பட்டது இல்லை. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மர்ம நபர்கள் யாரோ எழுதி சென்றனர். சுவரில் எழுதியது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் யாரும் பயப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.