பெங்களூருவில் பழைய இரும்பு வியாபாரி குத்திக் கொலை


பெங்களூருவில் பழைய இரும்பு வியாபாரி குத்திக் கொலை
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.புரத்தில் பணத்தகராறில் பழைய இரும்பு வியாபாரி குத்திக் கொன்ற நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கே.ஆர்.புரம், செப்.18-

குத்திக்கொலை

பெங்களூரு மேடஹள்ளியை சேர்ந்தவர் ரபீக் அகமது என்ற தாரிக் (வயது 28). இவர், பழைய இரும்புகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கே.ஆர்.புரம் அருகே டின் பேக்டரி முன்பாக வைத்து ரபீக் அகமதுவை மர்மநபர்கள் சிலர் வழிமறித்தனர். பின்னர் திடீரென்று அவரை மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தினார்கள்.

இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினாா. உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிய ரபீக் அகமதுவை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரபீக் அகமது இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பணத்தகராறில்...

இதுபற்றி தகவல் அறிந்ததும் மகாதேவபுரா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு சென்று ரபீக் அகமதுவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பணத்தகராறில் அல்லது பெண் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரபீக் அகமதுவை அவரது நண்பர்களே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாகி விட்ட அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story