ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வின் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு


ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வின் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x

பெங்களூருவில் ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வின் கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

பெங்களூரு:-

ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வின் கார்

பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்தவர் மாஜித் கான்(வயது 39). இவர் அப்பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலையில் இவர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் நிருபதுங்கா சாலையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மாஜித் கான் ஓட்ட, அவரது நண்பர் பின்னால் அமர்ந்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சிவமொக்கா மாவட்டம் சாகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான ஹாலப்பா ஆச்சாருக்கு சொந்தமான சொகுசு கார், மாஜித் கானின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் அந்த கார் நிற்காமல் 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள் மீது மோதி சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி நின்றது.

பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாஜித் கான் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபோல் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரும் படுகாயம் அடைந்திருந்தார். சிகிச்சைக்காக அவர் அங்குள்ள செயின்ட் மார்த்தாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். அவர் கே.ஜி.ஹள்ளி பகுதியைச் சேர்ந்த அய்யப்பா(60) ஆவார்.

இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. விபத்தில் இறந்த மாஜித் கானின் நண்பர் உள்பட 4 பேர் செயின்ட் மார்த்தாஸ் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கைது

இதையடுத்து விபத்துக்கு காரணமான ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் மோகன் கைது செய்யப்பட்டார். அவர் மீது அல்சூர் கேட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஹாலப்பா ஆச்சார் எம்.எல்.ஏ.வின் மகள், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும், அவரை கல்லூரியில் கொண்டு சென்று விடுவதற்காக மோகன் காரை வேகமாக ஓட்டி வந்ததும், அதன் காரணமாக விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும் அந்த காரை ஹாலப்பா ஆச்சார், பெங்களூருவில் வசித்து வரும் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி ராமு சுரேசின் பெயரில் வாங்கி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story