காங்கிரசில் சேர யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்
காங்கிரஸ் கட்சியில் சேர யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
சிவாஜிநகர்:-
சேவகர்கள் இல்லை
கர்நாடக காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் நிறுவன நாள் விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரசுக்கு இன்று (நேற்று) பிறந்த நாள். இந்த தினத்தை நான் கட்சியின் சேவா தளத்துடன் கொண்டாடினேன். அவா்கள் சேவகர்கள் இல்லை, தலைவா்கள் என்று கூறினேன். சேவா தளத்தினருக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என்று நாங்கள் ஏற்றகனவே முடிவு செய்துள்ளோம். ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் கொள்கை வாக்கியத்தை பூத் மட்டத்தில் மக்களிடம் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இந்த நிகழ்வை அடுத்த ஒரு மாதத்திற்கு மேற்கொள்ள உள்ளோம்.
நிராகரிக்க மாட்டோம்
பிற கட்சிகளை சோ்ந்த நிர்வாகிகள் பலர் காங்கிரசில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். கர்நாடகத்தில் பலமான காங்கிரஸ் அரசு அமையும். அதில் ஒரு பாகமாக இருக்க நினைக்கிறவர்கள் காங்கிரசில் சேரலாம். நாங்கள் யாரையும் வேண்டாம் என்று நிராகரிக்க மாட்டோம். எங்களை விட்டு பிரிந்து சென்ற பலர் மீண்டும் கட்சிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மனு வழங்குமாறு கூறியுள்ளேன்.
இதில் கட்சியை விட்டு விலகி பா.ஜனதாவில் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனரா? என்பதை இப்போது என்னால் கூற முடியாது. யார் வேண்டுமானாலும் கட்சியில் சேர விண்ணப்பிக்கலாம். ராமநகரில் ராமர் கோவில் கட்டட்டும். அதை வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லையே. எந்த கோவில் வேண்டுமானாலும் கட்டட்டும். மந்திரி அஸ்வத் நாராயணின் கோவில் வேண்டுமானாலும் கட்டி கொள்ளட்டும். நான் கடந்த 35 ஆண்டுகளாக ராமநகரில் பல ஆண்களை பார்த்துள்ளேன்.
முககவசம் அணிகிறார்களா?
உள் அரங்குகளில் நடைபெறும் கூட்டங்களில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு கட்டாயமாக்கியுள்ளது. சட்டசபை கூட்டம் ஏ.சி. அரங்கில் தான் நடக்கிறது. அங்கு முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் முககவசம் அணிகிறார்களா?. தாங்கள் முககவசம் அணியாமல், பிறரை மட்டும் அதை அணிய வேண்டும் என்று சொல்கிறார்கள். இது என்ன நியாயம்?. அமித்ஷா கர்நாடகம் வருகை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.