சொந்த அண்ணன் வீட்டில் நகைகள் திருடியதாக கைது:
சொந்த அண்ணன் வீட்டில் நகைகளை திருடியதாக கைதான தொழிலாளியை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளியின் மனைவி, போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
சிக்கமகளூரு:-
நகைகள் திருட்டு
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா தாரதவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாத். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து விஸ்வநாத் மூடிகெரே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மூடிகெரே போலீசார் சென்று பார்வையிட்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, சம்பவ இடத்தில் இருந்த மர்ம நபரின் கைரேகையை கைப்பற்றினர்.
பின்னர் அந்த கைரேகையை போலீஸ் நிலையத்தில் உள்ள பழைய திருடர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது எந்த கைரேகையுடனும், அவை ஒத்துப்போகவில்லை. இறுதியாக விஸ்வநாத்தின் குடும்பத்தில் இருந்தவர்கள் மீது சந்தேகம் அடைந்து ஒவ்வொருவரையும் வரவழைத்து கைரேகையை ஆய்வு செய்தனர். அப்போது விஸ்வநாத்தின் சகோதரர் மஞ்சுவின், கைரேகையுடன், திருடனின் கைரேகை ஒத்துப்போனது. இதை அறிந்த விஸ்வநாத் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது சகோதரன்தான் திருடியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறி, அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார்
இதையடுத்து மூடிகெரே போலீசார் மஞ்சுவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் கைதான மஞ்சு மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் மஞ்சுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இதுகுறித்து அறிந்த மஞ்சுவின் மனைவி, தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சொர்ணாவிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.