கைதான இந்து அமைப்பினரை லத்தியால் தாக்கிய இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
புத்தூரில் பா.ஜனதா மாநில தலைவர் உருவப்படத்திற்கு செருப்பு மாலை வழக்கில் கைதான இந்து அமைப்பினர் மீது போலீசார் லத்தியால் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
மங்களூரு-
புத்தூரில் பா.ஜனதா மாநில தலைவர் உருவப்படத்திற்கு செருப்பு மாலை வழக்கில் கைதான இந்து அமைப்பினர் மீது போலீசார் லத்தியால் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
உருவப்படத்திற்கு செருப்பு மாலை
கர்நாடக சட்டசபை தேர்தலில் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ஆஷா திம்மப்பகவுடா, காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ராயிடம் தோல்வியடைந்தார். இதற்கு பா.ஜனதாவின் உட்கட்சி பூசல்தான் காரணம் என்று கூறப்பட்டது. அதாவது பா.ஜனதாவை சேர்ந்த அருண் புட்டிலாவுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் அருண் புட்டிலா சுயேச்சையாக போட்டியிட்டார். இந்த போட்டியால், பா.ஜனதாவின் வாக்குகள் பிரிந்து, காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த புத்தூர் தொகுதியை சேர்ந்த பா.ஜனதா தொண்டர்கள், இந்து அமைப்பினர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் புத்தூர் பஸ் நிலையம் அருகே நளின் குமார் கட்டீல், சதானந்தகவுடாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேனர் வைத்தனர். அந்த பேனரில் நளின் குமார் கட்டீல், சதானந்தகவுடாவின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து அவமதித்தனர்.
கைதானவர்கள் மீது தாக்குதல்
இதை பார்த்த பா.ஜனதா தொண்டர்கள், புத்தூர் புறநகர் போலீசில் இது குறித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் அவினாஷ், சிவராம், சைத்ரேஷ், ஈஸ்வர், நிஷான் உள்பட 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் விசாரணையின் போது, 9 பேர் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இந்து அமைப்பை சேர்ந்த அவினாஷ் உள்பட 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் புத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 பேர் பணியிடை நீக்கம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தாக்குதலுக்கு உள்ளான அவினாஷின் தந்தை வேணுநாத், தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் அமதேவிடம் புகார் அளித்தார். அந்த புகாரை ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு, உடனே விசாரணை நடத்தும்படி பண்ட்வால் துணை போலீஸ் சூப்பிரண்டிற்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் விசாரணை நடத்தி நேற்று காலை போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கை அளித்தார். அதில் புத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநாத் ரெட்டி, போலீஸ் காரர் ஹர்ஷித் ஆகியோர் தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது. இதைபரிசீலனை செய்த போலீ்ஸ் சூப்பிரண்டு, உடனே இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் காரரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் புத்தூர் துணை போலீஸ் கண்காணிப்பாளர் வீரைய்யா ஹிரேமட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை செய்தார்.
இந்து அமைப்பினர் ஆறுதல்
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான இந்து அமைப்பை சேர்ந்த அவினாஷ் உள்பட 2 பேரையும், இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்கள், சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த அருண் புட்டிலா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.