தொழில் அதிபர் தற்கொலை: அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும்- காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்


தொழில் அதிபர் தற்கொலை: அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும்- காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபர் தற்கொலை வழக்கில் அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பெங்களூரு:

குடும்பத்தினருக்கு ஆறுதல்

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகே அமலேபுராவில் வசித்து வந்த தொழில் அதிபர் பிரதீப் (வயது 47) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ககலிபுரா அருகே நெட்டகெரே பகுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்து இருந்த கடிதத்தில் பெங்களூரு மகாதேவபுரா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவளி உள்பட 6 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இதனால் அரவிந்த் லிம்பாவளி உள்பட 6 பேர் மீது ககலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பிரதீப்பின் வீட்டிற்கு கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று நேரில் சென்றனர். பின்னர் பிரதீப்பின் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர். இதனை தொடர்ந்து சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

செயலற்ற தன்மை

பிரதீப் தற்கொலை செய்து கொண்டது நிதி விவகாரத்துடன் தொடர்புடைய துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த சம்பவம் நடந்து இருக்க கூடாது. தனது கணவர் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பிரதீப் ரூ.1½ கோடி முதலீடு செய்து உள்ளதாவும், ஒரு பைசா லாபம் கூட தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் பிரதீப்பின் மனைவி நமீதா வேதனையுடன் கூறினார். பிரதீப்பின் குடும்பத்திற்கு ரூ.1½ கோடி திரும்ப கிடைக்க வேண்டும். பிரதீப்பின் மனைவி யார் மீதும் குற்றச்சாட்டு கூறவில்லை. தனக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கிறார்.

பிரதீப் மரணத்தில் அரவிந்த் லிம்பாவளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். சட்ட நடவடிக்கையில் அரசு தலையிட கூடாது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

கைது செய்ய வேண்டும்

ரன்தீப் சுர்ஜேவாலா பேட்டி அளிக்கையில் கூறியதாவது, பிரதீப் தற்கொலையில் தொடர்புடைய அனைவரும் கைது செய்ய வேண்டும். அவர்கள் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அல்லது மூத்த பா.ஜனதா தலைவராக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் கண்டிப்பாக கைது செய்ய வேண்டும். பிரதீப்பின் குடும்பத்திற்கு அவர்களுக்கு சொந்தமான பணம் திரும்ப கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

தற்கொலை செய்து கொண்ட காண்டிராக்டர்கள் சந்தோஷ் பட்டீல், சுரேஷ் ஆகியோர் கமிஷன் கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். பா.ஜனதா தலைவர்கள் ஏன் மக்களின் நிதி விவகாரங்களில் தலையிட வேண்டும்?. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த பிரதீப்பை தற்கொலைக்கு தூண்டுவது கொலை தான். பிரதீப்பின் தற்கொலை வழக்கில் நீதி நிலைநாட்டப்படுவதையும், சந்தோஷ் பாட்டீல் தற்கொலை போல மீண்டும் நிகழாமல் இருப்பதையும் காங்கிரஸ் பார்த்துக் கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story