அசாம் மாநில நகர்ப்புற வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது: அசாம் அரசு பெருமிதம்!
நகர்ப்புற வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அதிகாரிகள் குழு சமீபத்தில் அசாம் சென்றது.
கவுகாத்தி,
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நகர்ப்புற வறுமையை ஒழிப்பதையும், நகர்ப்புறங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களை சமூக-பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சமீபத்திய முயற்சிகள் அகில இந்திய அளவில் அதிக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நகர்ப்புற ஏழை மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதில் அசாம் மாநிலம் அடைந்துள்ள வெற்றியானது, இப்போது நாட்டின் பிற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது என்று அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அசாம் மாடல் -நகர்ப்புற வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் அதிகாரிகள் குழு ஒன்று சமீபத்தில் அசாம் சென்றது. அங்கு அசாமின் நகர்ப்புறங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களால் நடத்தப்படும் நிறுவனங்களை இந்தக் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது.