உணவு விற்பனை பிரதிநிதி படுகொலை; தன்னை கொல்ல கொண்டு வந்த கத்தியை பிடுங்கி நண்பர் வெறிச்செயல்


உணவு விற்பனை பிரதிநிதி படுகொலை; தன்னை கொல்ல கொண்டு வந்த கத்தியை பிடுங்கி நண்பர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணத்தகராறில் உணவு விற்பனை பிரதிநிதியை ெகாலை ெசய்த அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குமாரசாமி லே-அவுட்:

பணத்தகராறு

பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோனனகுண்டே பகுதியில் சாலையின் ஓரத்தில் ஆண் பிணம் கிடந்தது. அதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக குமாரசாமி லே-அவுட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் சாலையில் இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த சரத் என்பதும், அவரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரத உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர். இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர், போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோனனகுண்டே பகுதியை சேர்ந்தவர் சரத். உணவு விற்பனை பிரதிநிதி. இவரது நண்பர் லோகேஷ். இவர்கள் 2 பேருக்கும் இடையே இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு லோகேஷ், அந்த சாலையில் சென்றார். அப்போது சரத் அவரை வழிமறித்துள்ளார்.

குத்திக் கொலை

அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியபோது, சரத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு லோகேசை குத்த முயன்றார். அப்போது லோகேஷ், சரத்தை தாக்கி அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி, சரத்தை சரமாரியாக குத்தி உள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரத் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து லோகேஷ் தப்பித்து தலைமறைவானார். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லோகேசை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story