தாவணகெரேயில் நூல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
தாவணகெரேயில் நூல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சிக்கமகளூரு-
தாவணகெரேயில் நூல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
தாவணகெரே டவுன் குமாரபட்டணா பகுதியில் உப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் காட்டன் நூல் தொழிற்சாலை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அந்த தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியானது. மேலும், அங்கு தீப்பிடித்து எரிந்தது. இதனால் தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் தாவணகெரே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 வாகனங்களில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.
ரூ.30 லட்சம்...
பின்னர் அவர்கள் தொழிற்சாலையில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் அங்கிருந்த காட்டன் நூல்கள் எரிந்து நாசமானது. மேலும் எந்திரங்களும் தீயில் எரிந்து கருகின. இதனால் ரூ.30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாவணகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மின்கசிவு காரணமாக காட்டன் நூல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தாவணகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.