லால்பாக்கில் மலர் கண்காட்சி: ராஜ்குமார், புனித்ராஜ்குமாரின் வாழ்க்ைக பற்றிய படைப்புகள்-பொதுமக்கள் நேரில் பார்த்து வியப்பு


லால்பாக்கில் மலர் கண்காட்சியில் ராஜ்குமார், புனித்ராஜ்குமாரின் வாழ்க்கை பற்றிய படைப்புகள் இடம் பிடித்துள்ளன. இதனை பார்த்து பொதுமக்கள் வியந்து போயினர்.

பெங்களூரு: லால்பாக்கில் மலர் கண்காட்சியில் ராஜ்குமார், புனித்ராஜ்குமாரின் வாழ்க்கை பற்றிய படைப்புகள் இடம் பிடித்துள்ளன. இதனை பார்த்து பொதுமக்கள் வியந்து போயினர்.

லால்பாக் மலர் கண்காட்சி

பெங்களூரு லால்பாக்கில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக லால்பாக்கில் மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு 75-வது சுதந்திர தின பவள ஆண்டையொட்டி லால்பாக்கில் மலர் கண்காட்சிக்கு விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, லால்பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகையில் மறைந்த நடிகர்கள் டாக்டர் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரை மையப்படுத்தி கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதற்காக கண்ணாடி மாளிகையில் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் சிலைகள் இடம் பெற்றுள்ளது. அந்த சிலைகள் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தொட்டகாஜனூரில் உள்ள ராஜ்குமாரின் பூர்வீக வீடு 3½ லட்சம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட பூச்செண்டுகளும் இடம் பெற்றுள்ளது. மைசூரு சக்திதாமா ஆசிரமமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி தொடங்கி வைத்தார்

இந்த மலா் கண்காட்சியை இன்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். முன்னதாக மறைந்த நடிகர்கள் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜோதியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெற்றுக் கொண்டார். பின்னர் அந்த ஜோதி, சிவராஜ்குமார் மற்றும் அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் வழங்கப்பட்டது. பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பூக்களை பார்வையிட்டார்.

இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி சுதந்திர தினம் வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி தினமும் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை நடைபெற உள்ளது. நேற்று தொடங்கிய மலர் கண்காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டார். கண்ணாடி மாளிகையில் ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரின் சிலைகள் மற்றும் வீடு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் ராஜ்குமார், புனித்ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய படைப்புகளும் இடம் பெற்றன. இதனை மக்கள் வியந்து பார்த்து சென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதுதவிர அலங்கார வளைவுகள், மயில், வண்ணத்துப்பூச்சி உள்ளிட்டவை பூக்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. ராஜ்குமார், புனித் ராஜ்குமாரின் சிலைகள், மற்றும் அவர்களின் மணல் சிற்பம், வீடு மற்றும் பூக்களால் வடிவமைக்கப்பட்ட மயில், வண்ணத்துப்பூச்சி, ஆகியவற்றின் முன்பு ஏராளமானோர் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ராஜ்குமாரின் குடும்பத்தினர் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் உள்ளிட்டோரும் அந்த மலர்களால் வடிவமைக்கப்பட்ட வீட்டின் முன்பு படம் எடுத்து கொண்டனர்.

மலர் கண்காட்சியை காண வந்தவர்கள் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் படங்களை கைகளில் ஏந்தி வந்தனர். மலர் கண்காட்சியையொட்டி லால்பாக்கில் 350 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

லால்பாக்கில் நடைபெறும் மலர் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உணவு உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கடைகளிலும், லால்பாக் உள்ளேயும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. லால்பாக்கில் உள்ள 4 நுழைவு வாயில் மூலமாக பொதுமக்கள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லால்பாக் உள்ளே வாகனங்களுடன் பொதுமக்கள் வருவதற்கு அனுமதி இல்லை. இதற்காக அருகில் உள்ள கல்லூரி மைதானம் மற்றும் சாந்திநகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலர் கண்காட்சிக்கு ரூ.2½ கோடி செலவு

பெங்களூரு லால்பாக்கில் கடந்த 2 ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்படாததால், இந்த ஆண்டு மலர் கண்காட்சியை பிரமாண்டமாக நடத்த தோட்டகலைத்துறை முடிவு செய்திருந்தது. மலர் கண்காட்சியில் தமிழ்நாடு ஊட்டி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த மலர்களும் கொண்டு வரப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக 12½ லட்சம் பூக்கள் மலர் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கிறது. இதற்காக தோட்டகலைத்துறை ரூ.2½ கோடியை செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணவ-மாணவிகளுக்கு இலவசம்

லால்பாக்கில் நேற்று தொடங்கிய மலர் கண்காட்சி வருகிற 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை காணவரும் பொதுமக்களுக்கு ரூ.75 நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மாணவ, மாணவிகள் மலர் கண்காட்சியை இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று தோட்டகலைத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் நுழைவு கட்டணம் இன்றி இலவசமாக கண்டுகளிக்க முடியும். இதற்காக பள்ளிகளில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக லால்பாக் உள்ளே செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

30 அடி உயரம் கொண்ட வீடு

லால்பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகையில் ராஜ்குமாரின் தொட்டகாஜனூர் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வீடு 30 அடி உயரம் கொண்டதாகவும், 15 அடி அகலம் கொண்டதாகவும் உள்ளது. 1¾ லட்சம் ரோஜா மலர்கள் மற்றும் 1½ லட்சம் சாமந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Next Story