நிலத்தகராறில் முதியவர் மீது தாக்குதல்:5 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
நிலத்தகராறில் முதியவர் மீது தாக்குதல் நடத்திய 5 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிகாரிப்புரா கோர்ட்டு தீர்ப்பு தீர்ப்பளித்தது.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா முலுவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னபசப்பா(வயது65). இவருக்கு சொந்தமாக அதேப்பகுதியில் நிலம் உள்ளது. இதன் அருகே அதேப்பகுதியை சேர்ந்த சுரேஷ்(55) என்பவருக்கு சொந்தமான இடமும் உள்ளது. இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து சுரேஷ் சன்னபசப்பாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளார். அப்போது அங்கு வந்த சன்னபசப்பாவுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது.
இதில் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சன்னகவுடப்பா, உமேஷப்பா, சந்தோஷ், குசுவம்மா ஆகியோர் சேர்ந்து சன்னபசப்பாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சிகாரிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், உமேஷப்பா, சந்தோஷ், குசுவம்மா, சன்னகவுடப்பா ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிகாரிப்புரா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் சுரேஷ், உமேஷப்பா, குசுவம்மா, சன்னபகவுடப்பா, சந்தோஷ் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 5 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.48 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கூறி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.