தனியாா் பள்ளி ஆசிரியை மீது தாக்குதல்
மங்களூரு அருகே தனியார் பள்ளியில் பெற்றோர் கூட்டத்தின்போது ஆசிரியை மீது தாக்குதல் நடந்த சம்பவம் நடந்துள்ளது.
மங்களூரு:
பணத்தகராறு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் சூரத்கல் அருகே காட்டிபல்லா 2-வது பிளாக்கில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சந்திரகலா. இவரது வீட்டின் அருகே வசித்து வரும் ஹனீப் என்பவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வந்தார். சந்திரகலாவிற்கும், ஹனீப்பின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரகலா, ஹனீப்பின் மனைவிக்கு கடன் கொடுத்துள்ளார். இதையடுத்து நாளடைவில் சந்திரகலா வாங்கிய கடனை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை திருப்பி கொடுக்க ஹனீப்பின் மனைவி மறுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியை மீது தாக்குதல்
இதனை ஹனீப்பிடம் அவரது மனைவி கூறியுள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு ஹனீப் வந்துள்ளார். சந்திரகலா ஆசிரியையாக பணியாற்றும் பள்ளியில் தான் ஹனீப்பின் பிள்ளை படிக்கிறது. ேநற்று பள்ளிக்கூடத்தில் நடந்த பெற்றோர், ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டத்தில் ஹனீப், அவரது மனைவி கலந்து கொண்டனர். அப்போது ஆசிரியை சந்திரகலாவிற்கும், ஹனீப்பின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ஹனீப், சந்திரகலாவை தாக்கினார். இதில் சந்திரகலாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது உடன் இருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆசிரியை சந்திரகலா கொடுத்த புகாரின் பேரில் சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.