கத்தியால் குத்தி மாமியாரை கொல்ல முயற்சி; பெண்ணிடம் போலீசார் விசாரணை
சிவமொக்கா அருகே குடும்பத்தகராறில் கத்தியால் குத்தி மாமியாரை கொல்ல முயற்சி செய்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சிவமொக்கா;
சிவமொக்கா புறநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், புறநகர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் எனது மகனுக்கும், ஒன்னாளியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து எனது மகன், பெங்களூருவுக்கு வேலைக்காக சென்றுவிட்டான்.
இதனால் இங்கு நானும், எனது மருமகளும் வசித்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எனக்கும், மருமகளுக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மருமகள் கோபித்துக்கொண்டு அவளது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து எனது மகன் வீட்டிற்கு வந்தான். அப்போது அவனிடம், நடந்த விஷயத்தை கூறினேன். இதையடுத்து அவன், மனைவியை தாய் வீட்டில் இருந்து அழைத்து வந்தான். அப்போது எனது மகனிடம், உன் மனைவி என்னை கொடுமைப்படுத்துவதாக தெரிவித்தேன்.
இதனால் ஆத்திரமடைந்த மருமகள் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து எனது இடது கையில் குத்தி கொல்ல முயன்றாள். எனவே, மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் சிவமொக்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது மருமகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.