கரக திருவிழாவில் பூசாரியை கொல்ல முயற்சி


கரக திருவிழாவில் பூசாரியை கொல்ல முயற்சி
x

பெங்களூருவில் கரக திருவிழாவில் பூசாரி மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

பூசாரியை கொல்ல முயற்சி

பெங்களூரு தர்மராயசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கரக திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கரக திருவிழா நடைபெற்றது. கோவில் பூசாரியான ஞானேந்திரா தர்மராய சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கரகத்துடன் ஊர்வலம் சென்று விட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்திருந்தார்.

ஞானேந்திரா கரகத்துடன் ஊர்வலம் செல்லும் போது, அவரது காலில் மஞ்சள் தண்ணீரை பக்தர்கள் ஊற்றுவது வழக்கம். இந்த கரக திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில், கரக ஊர்வலகத்தின் போது பூசாரி மீது ரசாயனம், மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றி, அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் தீவிர விசாரணை

இதுகுறித்து அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் தர்மராய சுவாமி கோவில் நிர்வாகியான சதீஸ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பூசாரி ஞானேந்திராவின் உடலில் ரசாயனம் மற்றும் மிளகாய் பொடி கலந்து ஊற்றி கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது. இதில், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் தனது உடலில் ரசாயனம் கலந்த தண்ணீரை ஊற்றி, என்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாக ஞானேந்திராவும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story