கர்நாடக பால் கூட்டமைப்பை தனியார் மயமாக்க முயற்சி; காங்கிரஸ் குற்றச்சாட்டு


கர்நாடக பால் கூட்டமைப்பை தனியார் மயமாக்க முயற்சி; காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 April 2023 6:45 PM GMT (Updated: 10 April 2023 6:46 PM GMT)

கர்நாடக பால் கூட்டமைப்பை தனியார் மயமாக்க முயற்சி நடப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூரு:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.கே.சுரேஷ் எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பொருளாதார புரட்சி

தேசிய அளவில் கர்நாடகத்தில் தான் அதிக வங்கிகள் தொடங்கப்பட்டன. கர்நாடக வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, விஜயா வங்கி, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு ஆகிய வங்கிகள் கா்நாடகத்தை சேர்ந்தவை. இந்த வங்கிகள் லாபத்தில் இயங்கி வந்தன. ஆனால் அந்த வங்கிகளை வேறு வங்கிகளுடன் இணைத்துவிட்டனர்.

இதன் மூலம் கர்நாடகத்தின் அடையாளங்களை நாம் இழந்துள்ளோம். இது நமது கர்நாடக பா.ஜனதா கட்சியினருக்கு புரியவில்லை. கர்நாடகத்தில் கர்நாடக பால் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஒரு கூட்டுறவு நிறுவனம் ஆகும். கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.

பால் பற்றாக்குறை

மாநிலத்தில் 28 லட்சம் விவசாய குடும்பங்கள் பால் பண்ணை தொழிலை நம்பியுள்ளன. இத்தகைய பலம் வாய்ந்த பால் கூட்டுறவு சங்கங்களை பலவீனப்படுத்த குஜராத் அரசியல்வாதிகள் முயற்சி செய்கிறார்கள். நமது கர்நாடக பால் கூட்டமைப்பு 160 பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றன. இங்கு பால் பற்றாக்குறை இல்லை. ஆனால் மக்களுக்கு பால் கிடைக்காமல் செயற்கையாக பால் பற்றாக்குறை பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.

இதன் மூலம் தனியார் பால் நிறுவனத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்துகிறார்கள். குஜராத் அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் வியாபார நோக்கத்துடன் பார்க்கிறார்கள். கர்நாடக பால் கூட்டமைப்பு கன்னடர்களுடன் உணர்வு பூர்வமான உறவை கொண்டுள்ளது. வரும் நாட்களில் பால் உற்பத்தி குறைந்தால் அதற்கு பா.ஜனதாவே பொறுப்பு. பா.ஜனதாவினரால் தான் குழப்பம் ஏற்படுகிறது.

விமான நிலையங்கள்

ஏற்கனவே விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரோடுகள் என நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. எல்.ஐ.சி.யையும் விற்க முயற்சி செய்கிறார்கள். இப்போது கர்நாடக பால் கூட்டமைப்பை தனியார் மயமாக்க முயற்சி நடக்கிறது.

இவ்வாறு டி.கே.சுரேஷ் கூறினார்.


Next Story