நர்சிங் மாணவியை கற்பழிக்க முயற்சி; ஓட்டல் ஊழியர் கைது
நர்சிங் மாணவியை கற்பழிக்க முயன்ற ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு: பெங்களூரு விவேக்நகர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியின் மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. இதனால் அந்த மாணவி கதவை திறந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஒருவர் மாணவியை கையை பிடித்து இழுத்து கற்பழிக்க முயன்றதாக தெரிகிறது. இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தாக்கியதாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி கூச்சல் போட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மார்சன் (வயது 22) என்பதும், அவர் ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்ததும் தெரியவந்தது. சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மார்சன் மீது விவேக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.