500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி; 2 பேர் கைது


500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கள்ளநோட்டுகள் கோவையில் அச்சடிக்கப்பட்டதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

மங்களூரு:

வாகன சோதனை

கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் கத்ரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நந்தூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 2 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் கையசைத்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

பின்னர் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், ஸ்கூட்டரில் சோதனை நடத்தினர்.

ரூ.4½ லட்சம் கள்ளநோட்டுகள்

அப்போது ஸ்கூட்டரில் ஒரு பையில் கத்தை, கத்தையாக பணம் இருந்தது. அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். அந்த நோட்டுகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது தான் அவை கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பண்ட்வால் தாலுகா பி.சி.ரோடு பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் (வயது 32), ஜெப்பு பகுதியை சேர்ந்த ரஜீம் (31) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் பெங்ளூருவை சேர்ந்த டேனியல் என்பவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகளை வாங்கி வந்து மங்களூருவில் புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் அச்சடிப்பு

இந்த சம்பவம் குறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மங்களூருவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெங்களூருவை சேர்ந்த டேனியல் என்பவரிடம் கள்ளநோட்டுகளை வாங்கி வந்துள்ளனர். டேனியலுக்கு தமிழ்நாடு கோவையில் இருந்து கள்ளநோட்டுகள் கிடைத்துள்ளது. கோவையில் கள்ளநோட்டுகளை அச்சடித்து கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. வங்கி அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு செய்ததில், நவீன தொழில்நுட்பம் மூலம் யாரும் எளிதாக கண்டுபிடிக்க முடியாத வகையில் கள்ளநோட்டுகளை அச்சடித்து உள்ளனர்.

இதுகுறித்து கோவை போலீசாரிடம் ஆலோசனை நடத்தி, இதன் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிஜாமுதீன், ரஜீமுக்கு கள்ளநோட்டுகளை சப்ளை செய்த டேனியலை ஏற்கனவே பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இதன் பின்னணியை கண்டறிந்து கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story