குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றும் முயற்சி நடந்தது


குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றும் முயற்சி நடந்தது
x

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தான் குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சித்தராமையா கூறியுள்ளார்.

உப்பள்ளி:-

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நில உரிமை பத்திரம்

கர்நாடகத்தில் சுமார் 1,450 குக்கிராமங்கள் வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு பிரதமர் மோடி நில உரிமை பத்திரத்தை வழங்கியுள்ளார். அந்த குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்றும் முயற்சி காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பிரதமர் மோடியை அழைத்து, இந்த பணியை பா.ஜனதா அரசு செய்தது போல் அக்கட்சியினர் வெளிக்காட்டி கொள்கிறார்கள்.

அதாவது சமையல் செய்தவர்கள் நாங்கள், பா.ஜனதாவினர் உணவு சாப்பிடுகிறார்கள். சேவாலால் ஜெயந்தி விழாவை அரசு சாா்பில் நடத்தும் முடிவு எனது ஆட்சியின்போது எடுக்கப்பட்டது. லம்பானி சமூக மேம்பாட்டு வாரியத்தை புதிதாக உருவாக்கினேன். அந்த லம்பானி மக்களின் மேம்பாட்டிற்கு பா.ஜனதா ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் வெறும் ரூ.30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு நில உரிமை பத்திரத்தை நாங்கள் தயாரித்தோம். அதை பா.ஜனதாவினர் தற்போது வழங்குகிறார்கள்.

எனக்கு பயம் இல்லை

எனது ஆட்சியில் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. அந்த தொகை தற்போது ரூ.42 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால் ரூ.28 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளனர். மீதி தொகையை வேறு துறைகளுக்கு ஒதுக்கிவிட்டனர். பா.ஜனதா பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.

பிரதமர் மோடி பொய் பேசுகிறார். மோடியை கண்டால் எனக்கு பயம் இல்லை. ஆனால் என்னை பார்த்து மோடி பயப்படுகிறார். நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சிக்கிறேன். உண்மையை மக்களுக்கு சொல்கிறேன். மோடி பிரசாரம் செய்வதால் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றுவிடாது. அவர் கூறும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story