கருணை கொலை செய்ய அனுமதி கோரி போலீஸ் கமிஷனருக்கு ஆட்டோ டிரைவர் கடிதம்


கருணை கொலை செய்ய அனுமதி கோரி போலீஸ் கமிஷனருக்கு ஆட்டோ டிரைவர் கடிதம்
x

தன் மீதான வழக்கு குறித்து மறுவிசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு ஆட்டோ டிரைவர் கடிதம் எழுதி உள்ளார்.

பெங்களூரு:-

வரதட்சணை கொடுமை

பெங்களூரு பசவனகுடி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா. ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டார் சார்பில் அவருக்கு வரதட்சணையாக பணம், நகைகள் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்

அவரது மனைவி, தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ஹர்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் இதுதொடர்பாக பசவனகுடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக குற்றப்பத்திரிகையும் அவர்கள் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் ஹர்ஷா, தனது மனைவி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பொய் புகார் அளித்து இருப்பதாகவும், தன் மீதான வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்.

கருணை கொலை

இந்த நிலையில் ஹர்ஷா பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனக்கும், எனது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வருகிறது. ஆனால் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக எனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுபற்றி அவர்கள் முறையான விசாரணை நடத்தவில்லை. ஆனால் அதற்குள் அவர்கள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டனர். எனக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவர்கள் முறையற்ற விசாரணை நடத்தியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்த போலீசார் உத்தரவிட வேண்டும். மறு விசாரணை நடந்தால் தான் உண்மை வெளிவரும். எனவே மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் என்னை கருணை கொலை செய்துவிட அனுமதியுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் ஹர்ஷா எழுதி இருந்தார்.

இந்த கடிதம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


Next Story