பாபாபுடன்கிரி காட்டுயானைகள் நடமாட்டம்-சுற்றுலா பயணிகள் பீதி
சிக்கமகளூரு பாபாபுடன்கிரி, முல்லையன்கிரி மலைப்பகுதியில் சுற்றித் திரியும் 2 காட்டுயானைகளால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர்.
சிக்கமகளூரு:-
காட்டுயானைகள் அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் உள்ள காண்டியா வனப்பகுதி. இந்த வனப்பகுதியையொட்டி ஏராளமான கிராமக்கள் உள்ளனர். மேலும் காபி, பாக்கு, மிளகு பயிர்கள் விளைவிக்கும் தோட்டம் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக காண்டியா வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அந்த காட்டுயானைகள் காபி, மிளகு செடிகளை சேதப்படுத்தியதுடன், பாக்கு மரங்களை முறித்து நாசப்படுத்திவிட்டு சென்றுள்ளன. இதனால் அதிருப்தியடைந்துள்ள தோட்ட உரிமையாளர்கள், வனத்துறையினர் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் காட்டுயானைகள் நாசப்படுத்திவிட்டு சென்ற விளை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் பீதி
அதே நேரம் இந்த காட்டுயானைகள் அட்டகாசத்தால் கூலி தொழிலாளிகள் வேலைக்கு செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கி கிடப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி காட்டுயானைகள் விளை நிலத்திற்குள் வருவதால், எங்கு அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுவோம் என்று அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள பாபாபுடன்கிரி, முல்லையன்கிரிக்கு இடைப்பட்ட மலைப்பகுதியில் 2 காட்டுயானைகள் சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சிக்கமகளூரு வரும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாபாபுடன்கிரி, முல்லையன்கிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுத்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள் என்று தெரிகிறது. இதனால் வனத்துறை அதிகாரிகள் பாபாபுடன்கிரி, முல்லையன்கிரி மலைப்பகுதியில் முகாமிட்டு அந்த காட்டுயானைகளை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவனமாக செல்ல அறிவுறுத்தல்
அதே நேரம் இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாபாபுடன்கிரி, முல்லையன்கிரி பகுதிகளில் கவனமாக நடமாடும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மலைப்பகுதியை தாண்டிய வனப்பகுதிக்குள் யாரும் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல மலைப்பகுதியையொட்டி காபி தோட்டத்திற்கு செல்லும் கூலி தொழிலாளிகளும் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் கூறியுள்ளனர். மேலும் யாரேனும் மலைப்பகுதியில் காட்டுயானைகள் நடமாடுவதை கண்டால் உடனே வனத்துறையினருக்கு தகவல் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தால் சிக்கமகளூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.