ஏ.டி.எம். மோசடி வழக்கில் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


ஏ.டி.எம். மோசடி வழக்கில் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

ஏ.டி.எம். மோசடி வழக்கில் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேரின் ஜாமீன் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

பெங்களூரு:

ஆப்பிரிக்காவை சேர்ந்த...

துமகூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் திலக் ராம். இவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து 'ஸ்வைப்' எந்திரம் மூலம் ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வங்கி கணக்கை முடக்கினர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவான் கம்போன்கே, லாரன்சு மகுமா என்பது தெரியவந்தது. அவர்கள் இதேபோல் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தங்களுக்கும், இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை எனவும், ஏற்கனவே 24 மாதங்கள் நீதிமன்ற காவலில் இருப்பதால் தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு கோரி மனு தாக்கல் செய்தனர்.

மனு தள்ளுபடி

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு ஜாமீன் வழங்கினால், அவர்கள் போலியான ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து தப்பி சென்றுவிட வாய்ப்புள்ளது என்றார். இதையடுத்து நீதிபதி, ஏ.டி.எம். மோசடி வழக்கில் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட முடியாது என கூறினார். மேலும் அவர்களது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்.


Next Story