கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 52 வயது பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு
கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 52 வயது பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு தெரிவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்டதாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராமசந்திரபுரா பகுதியை சேர்ந்த வனிதா (வயது 52) என்பது தெரிந்தது. அப்போது அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலரை போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர். இதையடுத்து அவர் என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டார். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த பெண் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் நீதிபதி, கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட கும்பலுடன், நேரடி தொடர்பில் இருந்ததால், பெண்ணுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.