முதலிரவு நடக்காததை வெளியே சொன்னதால் புதுப்பெண் கொலை - மாமியாரையும் தீர்த்துக்கட்டிய வங்கி ஊழியர் கைது
முதலிரவு நடக்காததை வெளியே சொன்னதால் புதுப்பெண்ணையும், மாமியாரையும் வெட்டிக்கொலை செய்த வங்கி ஊழியர், தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
அமராவதி,
ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சிந்துல நகரை சேர்ந்தவர் சரவணன். பி.டெக். படித்துள்ள இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், தெலுங்கானாவின் வனபாத்தியை சேர்ந்த ருக்மணி (வயது 20) என்பவருக்கும் கடந்த 1-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
தடபுடலாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து திருமணத்தன்று இரவு ருக்மணியின் வீட்டில் புதுதம்பதிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சரவணனுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாததால் அன்று முதலிரவு நடக்கவில்லை. அடுத்தடுத்த நாட்களிலும் இதே நிலையே நீடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ருக்மணி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியது. பெண்ணின் உறவினர்கள், சரவணனை கேலி கிண்டல் செய்தனர். மேலும் அவருக்கு ஆண்மை இல்லையா? என்றும் கேட்டனர். மேலும் சரவணனை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று ஆண்மை பரிசோதனை செய்தனர். மேலும் இந்த தகவல் சரவணனின் பெற்றோருக்கும் தெரியவந்தது.
மகனுக்கு ஆண்மை பரிசோதனை செய்ததை அறிந்த சரவணனின் பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். மேலும் தனது மருமகளின் குடும்பத்தினரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து திட்டமிட்டனர். இதனையடுத்து புதுமணத்தம்பதி சிந்துல நகருக்கு வந்தனர். புதுப்பெண் ருக்மணியுடன் அவரது தந்தை வெங்கடேஸ்வரலு, தாயார் ரமாதேவி (45) ஆகியோரும் வந்திருந்தனர்.
தனது மனைவி ருக்மணியை மாடிக்கு அழைத்து சென்ற சரவணன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ருக்மணி பரிதாபமாக இறந்தார். அந்த சமயத்தில் வீட்டின் மற்றொரு அறையில் அமர்ந்திருந்த ருக்மணியின் தந்தை வெங்கடேஸ்வரலு, தாயார் ரமாதேவி ஆகியோரை சரவணனின் தந்தை பிரசாத் கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
இதில் வெங்கடேஸ்வரலு ரத்தக்காயங்களுடன் வீட்டில் இருந்து தப்பி ஓடினார். ஆனால் ரமாதேவி வீட்டுக்குள் சிக்கியதால் அவரை பிரசாத் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்த வெங்கடேஸ்வரலுவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் ருக்மணி, ரமாதேவி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் மற்றும் அவரது தந்தை பிரசாத் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். முதலிரவு நடக்காததை வெளியே சொன்னதால் புதுப்பெண்ணையும், மாமியாரையும் வங்கி ஊழியர் தந்தையுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.