பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பது பற்றி இதுவரை ஆலோசிக்கவில்லை
கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றுவது உறுதி என்றும், பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பது பற்றி இதுவரை ஆலோசிக்கவில்லை என்றும் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூருவில் நேற்று மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தகவல்கள் சேகரிப்பு
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி காங்கிரஸ் நடந்து கொண்டுள்ளது. ஆட்சி அமைத்த ஒரு மணிநேரத்தில் நடந்த முதல் மந்திரிசபை கூட்டத்தில் 5 இலவச திட்டங்களுக்கும் முதல்-மந்திரி சித்தராமையா ஒப்புதல் அளித்திருந்தார். அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் 5 இலவச திட்டங்களை அமல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி நடைமுறைப்படுத்துவோம். இலவச திட்டங்களை நிறைவேற்றியே தீருவோம்.
200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கு வழங்கப்படும், எந்த மாதிரியாக மின்சாரம் கிடைக்கும் என்பது குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல், எந்தெந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து தகவல்களை பெற்றுள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அதில் இருந்து காங்கிரஸ் கட்சி ஒரு போதும் பின்வாங்க போவதில்லை.
பா.ஜனதாவினருக்கு வயிற்று எரிச்சல்
5 இலவச திட்டங்களுக்கும் தகுதியானவர்களுக்கு கிடைப்பதுடன், அதன் உண்மை நிலவரம் என்பது பற்றிய தகவல்களும் பெறப்பட்டு வருகிறது. ஏனெனில் பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள பஸ் பாஸ் வழங்கும்படி போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
அந்த நிதி இழப்பை சரி செய்ய என்ன செய்ய வேண்டும், அதற்கான வழிமுறைகள் என்ன? என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் சொன்னபடி நடந்து கொள்வதால், ஏற்கனவே சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கும் பா.ஜனதாவினருக்கு வயிற்று எரிச்சலில இருந்து வருகின்றனர். அடுத்து நமது நிலை என்ன ? என்பது தெரியாமல் பா.ஜனதாவினர் பேசி வருகிறார்கள்.
ஆலோசிக்கவில்லை
கர்நாடகத்தில் பஜ்ரங்தள அமைப்பை தடை செய்வது பற்றி அரசு இதுவரை எந்த ஆலோசனையும் செய்யவில்லை. அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கு, அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் விதமாக பஜ்ரங்தள் அமைப்பினர் நடந்து கொண்டால், அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. எந்த ஒரு அமைப்புக்கும் திடீரென்று தடை விதிக்க ஆவதில்லை.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.