பசவனகுடி கடலைக்காய் திருவிழா


பசவனகுடி கடலைக்காய் திருவிழா
x

வரலாற்று சிறப்புமிக்க பெங்களூரு பசவனகுடி கடலைக்காய் திருவிழாவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். இந்த கடலைக்காய் திருவிழா வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

பெங்களூரு:-

கடலைக்காய் திருவிழா

பெங்களூரு பசவனகுடியில் உள்ள தொட்ட கணபதி கோவிலில் ஆண்டுதோறும் கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கடலைக்காய் திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பல நூறு ஆண்டுகளாக கடலைக்காய் திருவிழா பசவனகுடியில் நடைபெற்று வருகிறது. பெங்களூரு புறநகர் மாவட்டம், ராமநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடலைக்காய் திருவிழாவில் பங்கேற்று, கடலைக்காய் விற்பனை செய்வார்கள்.

அதாவது கன்னட கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமை இந்த கடலைக்காய் திருவிழா தொடங்கி நடைபெறும். அதன்படி, நாளை (திங்கட்கிழமை) பசவனகுடி தொட்ட கணபதி கோவிலில் கடலைக்காய் திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது. முன்னதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையிலேயே கடலைக்காய் திருவிழாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்க உள்ளார்.

நாளை அபிஷேகம்

அதைத்தொடர்ந்து, நாளை (திங்கட்கிழமை) காலை தொட்ட பசவண்ணா மற்றும் தொட்ட கணபதிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, கடலைக்காய் மூலமாக சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் கடலைக்காய் துலாபாரமும் நடைபெற உள்ளது. அபிஷேகம் செய்யப்படும் கடலைக்காய் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று கோவில் பூசாரி தெரிவித்துள்ளார். வருகிற 22-ந் தேதி வரை இந்த கடலைக்காய் திருவிழா நடைபெற உள்ளது.

கடலைக்காய் திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கினாலும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொட்ட கணபதி கோவில் முன்பாக உள்ள சாலைகளில் வியாபாரிகள் கடலைக்காய் விற்பனையை தொடங்கி விட்டார்கள். இதன் காரணமாக பசவனகுடி சாலையின் இருபுறங்களிலும் கடலைக்காய் குவியல்களுடன் வியாபாரிகள் குவிந்து உள்ளதால், விழாக்கோலம் பூண்டு இருப்பதை காண முடிகிறது. கடலைக்காய் தவிர உணவு பொருட்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அமைக்க தேவையான ஏற்பாடுகள் மாநகராட்சி சாாபில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

600 போலீசார் குவிப்பு

இந்த நிலையில், கடலைக்காய் திருவிழா தொடங்குவதையொட்டி நேற்று காலையில் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ஜெயராம் ராய்ப்பூர் மற்றும் அதிகாரிகள் பசவனகுடி தொட்ட கணபதி கோவிலுக்கு சென்றார்கள். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கடலைக்காய் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

கடலைக்காய் திருவிழாவை காண்பதற்கு 6 முதல் 8 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை, பெண் போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

போக்குவரத்தில் மாற்றம்

கடலைக்காய் திருவிழாவையொட்டி பசவனகுடி பகுதியில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கடலைக்காய் திருவிழா காரணமாக பசவனகுடி தொட்ட கணபதி கோவில் முன்பாக உள்ள சாலையில் இன்று மாலையில் இருந்து வருகிற 22-ந் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் செல்வதற்காக போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கடலைக்காய் திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால், இன்னும் 3 நாட்கள் அப்பகுதியில் மின்தடை ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பெஸ்காமுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கடலைக்காய் திருவிழா உருவான வரலாறு

பெங்களூரு பசவனகுடியில்

ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் கடலைக்காய் திருவிழாவுக்கு ஒரு வரலாறு உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கடந்த காலத்தில் பசவனகுடி ஒரு கிராமமாக இருந்தது. இந்த கிராமத்தை சுற்றி தாசரஹள்ளி, மாவள்ளி, சுங்கேனஹள்ளி, கவிபுரா குட்டஹள்ளி அகிய கிராமங்கள் இருந்தன. இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடலைக்காயை விளைவித்து வந்தனர். ஆனால் ஒவ்வொரு பவுர்ணமியின்போதும் கடலைக்காய்களை ஒரு காளை மாடு சேதப்

படுத்தி வந்தது. இதனை தடுக்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி நந்தி சிலையிடம் தாங்கள் விளைவிக்கும் கடலைக்காயை முதல் காணிக்கையாக வழங்குவதாக வேண்டி கொண்டனர். அதன்பின்னர் மாடுகள், கடலைக்காயை சேதப்படுத்துவது நின்றுவிட்டது. இதற்கிடையே பசவனகுடி கிராமத்தில் ஒரு நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூருவை நிர்மாணித்த கெம்பேகவுடா கடந்த 1537-ம் ஆண்டு பசவனகுடி கிராம மலை உச்சியில் தொட்ட பசவ கோவிலை கட்டி சிலையை நிறுவினார். அந்த சிலையின் மீது விவசாயிகள் கடலைகாய்களை கொட்டி வழிபட்டனர். அப்போது தொடங்கி தற்போது வரை இந்த கடலைக்காய் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடலைக்காய் வாங்கி அங்குள்ள நந்தி சிலை மீது பக்தர்கள் கொட்டிவழிபடுவது வழக்கம்.


Next Story