நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடுத்த மாதம் டெல்லி பயணம்
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடுத்த மாதம் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
பெங்களூரு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6 மற்றும் 7-ந் தேதிகளில், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் அடுத்த மாதம் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் டெல்லி செல்ல இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு போதிய நேரம் இருந்தால், பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்திருக்கிறார்.
ஏற்கனவே ஒரு ஆண்டு சாதனை மாநாட்டு நிகழ்ச்சிக்காக பெங்களூருவுக்கு வர இருந்த பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன், மந்திரி சபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச இருந்தார். ஆனால் பா.ஜனதா பிரமுகர் கொலை காரணமாக சாதனை மாநாடு ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக ஜே.பி.நட்டாவுடன் பேச முடியாமல் போனது. இதையடுத்து, வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் டெல்லி செல்லும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.