நாட்டிலேயே ஊழல் அதிகம் நடப்பது பசவராஜ் பொம்மை ஆட்சியில் தான்
40 சதவீத கமிஷன் பெறுவது வேறு எங்கும் இல்லை என்றும், நாட்டிலேயே ஊழல் அதிகம் நடப்பது பசவராஜ் பொம்மை ஆட்சியில் தான் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
விஜயநகர், ஜன.18-
மக்கள் குரல்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் குரல் என்ற பெயரில் பொதுக்கூட்டம் மற்றும் பஸ் யாத்திரை நடைபெற்று வருகிறது. பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வருகை தந்ததால், பஸ் யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பஸ் யாத்திரை நேற்று விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் மீண்டும் தொடங்கியது.
ஒசப்பேட்டேயில் நடைபெற்ற மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேசியதாவது:-
40 சதவீத கமிஷன்
மக்கள் குரல் என்றால், கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் குரல் இல்லை. ஒட்டு மொத்த கர்நாடக மக்களின் குரல் ஆகும். கர்நாடகத்தில் நடைபெறும் பா.ஜனதா ஆட்சியில் ஊழலை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. நாட்டிலேயே இதுபோன்ற ஒரு ஊழல் முறைகேடுகள் நடைபெறுவது பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியில் தான்.
கர்நாடகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 40 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று 40 சதவீத கமிஷன் பெறப்படுவதில்லை. ஒப்பந்ததாரர்கள் மட்டும் இல்லை, எந்த ஒரு வேலை நடைபெற வேண்டும் என்றாலும், கமிஷன் வாங்குவதில் மட்டுமே இந்த அரசு குறியாக இருக்கிறது. ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்டு மந்திரிகள் தொல்லை கொடுப்பதால், ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ரூ.90 லட்சம் லஞ்சம்
திப்பா ரெட்டி எம்.எல்.ஏ. ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் செயலாளரிடம் இருந்து மட்டும் ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றிருக்கிறார். ஒரு ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.90 லட்சம் பெற்றிருந்தால், மற்றவர்களிடம் இருந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. எவ்வளவு லஞ்சம் பெற்றிருப்பார் என்பதை மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கர்நாடகத்தில் இந்த ஊழல் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும். காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை காங்கிரசால் மட்டுமே கொடுக்க முடியும். இன்னும் 70 நாட்களில் இந்த பா.ஜனதா அரசின் ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.