பசவராஜ் பொம்மை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
வாக்காளர்கள் தகவலகள் திருட்டு, பெயர் நீக்கத்திற்கு பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நியாயமான தேர்தல்
எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் நியாயமான முறையிலும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடியதுடன், தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்திற்காக குறிப்பிட்ட சமூகத்தின் வாக்காளர்களை, பட்டியலில் இருந்து நீக்கம் செய்திருந்தார்கள். இதுபோன்ற முறைகேடுகள் பா.ஜனதா ஆட்சியில் மட்டுமே நடைபெறும். இந்த முறைகேடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தோம்.
இந்த முறைகேடு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. வாக்காளர்கள் பெயர்களை இஷ்டத்திற்கு சேர்ப்பது, விடுவிப்பது போன்ற செயல்கள் நடைபெறக்கூடாது. அவ்வாறு நடப்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்.
ராஜினாமா செய்ய வேண்டும்
வாக்காளர்களின் தகவல்களை திருடுவதற்காக சிலுமே நிறுவனத்திற்கு, அரசு பணிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பது போல், அதிகாரிகளை பா.ஜனதாவினர் நியமித்திருக்கிறார்கள். இதன்மூலம் சிலுமே நிறுவனம் மாநகராட்சி அதிகாரிகள் போல் செயல்பட்டுள்ளனர். பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரியாக இருப்பவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை. அவருக்கு தெரியாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே வாக்காளர்களின் தகவல் திருட்டு விவகாரத்தில் தார்மீக பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.