பஞ்சாப் ராணுவ முகாமில் மேலும் ஒரு வீரர் குண்டு பாய்ந்து சாவு


பஞ்சாப் ராணுவ முகாமில் மேலும் ஒரு வீரர் குண்டு பாய்ந்து சாவு
x

கோப்புப்படம்

4 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாப் ராணுவ முகாமில் மேலும் ஒரு வீரர் குண்டு பாய்ந்து இறந்தார்.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் இயங்கி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ராணுவ முகாம்களில் அதுவும் ஒன்றாகும்.

அங்கு நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக சந்தேகம் ஏற்பட்டது. ராணுவத்தின் விரைவு அதிரடிப்படையினர் களம் இறக்கப்பட்டனர்.

படைவீரர்கள் தங்குமிடத்தில் 4 ராணுவ வீரர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர். பயங்கரவாத தாக்குதல் நடக்கவில்லை என்று ராணுவம் உறுதி செய்தது. ஆனால், யார் சுட்டுக்கொன்றது என்று தெளிவாக தெரியவில்லை.

தமிழ்நாட்டு வீரர்கள்

3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 'இன்சாஸ்' துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. கொலைக்கு அது பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பலியான வீரர்களில் யோகேஷ்குமார் (வயது 24), கமலேஷ் (24) ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். சாகர் பன்னே (25), சந்தோஷ் நகரல் (25) ஆகியோர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். அவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

மர்ம நபர்கள்

சம்பவத்தின்போது, வெள்ளை நிற குர்தா-பைஜாமா அணிந்த 2 மர்ம நபர்கள், துப்பாக்கி சூடு நடத்தி விட்டு வெளியேறியதை பார்த்ததாக ஒரு ராணுவ வீரர் தெரிவித்தார்.

ஒருவன் 'இன்சாஸ்' துப்பாக்கியும், மற்றொருவன் கோடரியும் வைத்திருந்தனர். நடுத்தர உயரத்தில் இருந்த அவர்கள், தன்னை பார்த்தவுடன், அருகில் உள்ள வனப்பகுதி நோக்கி சென்று விட்டதாக அந்த ராணுவ வீரர் கூறினார்.

அதன் அடிப்படையில், அடையாளம் தெரியாத 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த கொலையாளிகளுக்கு எதிராக நேற்று தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் வைத்து தேடி வருகின்றனர்.

மேலும் ஒரு வீரர் சாவு

இந்நிலையில், 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட 12 மணி நேரம் கழித்து, அதே ராணுவ முகாமில் ஒரு ராணுவ வீரர் குண்டு பாய்ந்து இறந்தார். அவர் காவலாளி பணியில் இருந்தார்.

அவர் அருகே அவரது பணி துப்பாக்கியும், காலி தோட்டாக்களும் இருந்தன. கன்னத்தில் குண்டு பாய்ந்த நிலையில் கிடந்த அவரை ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சற்று நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவர் பெயர் லகுராஜ் சங்கர்.

தற்கொலையா? விபத்தா?

விடுமுறை முடிந்து, கடந்த 11-ந் தேதிதான் அவர் மீண்டும் பணிக்கு வந்திருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆனால், தவறுதலாக துப்பாக்கி வெடித்திருக்கலாம் என்று ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்தார். இருப்பினும், அவரது மரணத்துக்கும், 4 பேர் கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ராணுவ வீரர் லகுராஜ் சங்கர் மரணம் குறித்து பதிண்டா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story