பெலகாவி கிராமங்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவதாக கூறுவதா?


பெலகாவி கிராமங்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவதாக கூறுவதா?
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவியில் உள்ள கிராமங்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதாக மந்திரி ஒருவர் கூறிய நிலையில் மராட்டிய மாநில அரசை உடனே கலைக்க வேண்டும் என்று மத்திய அரசை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மகாஜன் அறிக்கை

கர்நாடக எல்லைக்குள் இருக்கும் பெலகாவி மாவட்டத்திற்குள் உள்ள 865 கிராமங்களில் வசிக்கும் மராத்தி சமூக மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மராட்டிய அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. கர்நாடகம்-மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினையில் மகாஜன் அறிக்கையே இறுதியானது. இந்த அறிக்கை 1966-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை கர்நாடகம் ஒப்புக்கொண்டது. ஆனால் மராட்டிய மாநிலத்தினர் தொடர்ந்து பிரச்சினை செய்து கொண்டே இருந்தனர். மத்திய அரசு தான் மகாஜன் குழுவை அமைத்தது. அவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். மராட்டிய மாநிலத்தினர் தற்போது கர்நாடகத்தில் உள்ள 865 கிராமங்களை தங்களுடையது என்று சொல்கிறார்கள்.

கன்னடர்களின் உரிமை

இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் மத்திய அரசோ அல்லது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையோ மவுனமாக உள்ளனர். இங்குள்ள அரசு செத்துவிட்டதா?. இந்த விவகாரம் கர்நாடகத்தின் ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும். மொழி, கலாசாரம், நிலம், நீர் ஆகியவை கன்னடர்களின் உரிமை.

இது கன்னடர்களின் ஒற்றுமையின் அடையாளம். இதற்கு பாதிப்பு வரும்போது, மத்திய-மாநில அரசுகள்

மவுனமாக இருக்க கூடாது.

இத்தகைய விவகாரங்களால் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பங்கம் ஏற்படுகிறது. இந்த கூட்டாட்சியில் நீடிப்பது குறித்து தவறான யோசனைகள் தொடங்கிவிடும். மராட்டிய எல்லையில் இருக்கும் கன்னடர்கள், தங்களை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அதற்காக இந்த விஷயத்தில் கர்நாடகம் தலையிட முடியுமா?. இதை மராட்டிய மாநிலம் கவனிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மராட்டிய மாநில அரசை மத்திய அரசு உடனே கலைக்க வேண்டும். கர்நாடகத்தின் நலனை காக்க வேண்டும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story