பெங்களூரு மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு: ஐகோர்ட்டில் இன்றும் விசாரணை


பெங்களூரு மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு:  ஐகோர்ட்டில் இன்றும் விசாரணை
x

பெங்களூரு மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு குறித்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் இன்றும் (புதன்கிழமை) நடக்கிறது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு குறித்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் இன்றும் (புதன்கிழமை) நடக்கிறது.

மாநகராட்சிக்கு தேர்தல்

பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலின் பதவி காலம் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அப்போது 198 வார்டுகள் இருந்தன. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படாததால், மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். கர்நாடக அரசு, வார்டு மறுவரையறை குழுவை அமைத்தது. இதற்கிடையே மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்பட்டது. மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வார்டுகள் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி மாநில அரசு 243 வார்டுகளுக்கு இட ஒதுக்கீட்டு பட்டியலை அறிவித்தது. அதில், 126 வார்டுகள் பெண்களுக்கும், 81 வார்டுகள் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும், 28 வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கும், 4 வார்டுகள் பழங்குடியின சமூகத்திற்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் ஒரு சட்டமன்ற தொகுதியில் அனைத்து வார்டுகளும் மகளிருக்கு ஒதுக்கப்பட்டன.

உத்தரவிட வேண்டும்

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனு மீது நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாநில தேர்தல் ஆணைய வக்கீல் பனிந்திரா, "மகாஜன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு இந்த வழக்கிற்கும் பொருந்தும். அதனால் மாநகராட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்" என்றார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இட ஒதுக்கீட்டை சரியான முறையில் அரசு மேற்கொள்ளவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றும் கூறி வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story