பெங்களூரு மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூரு மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலின் பதவி காலம் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்பட்டது. மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வார்டுகள் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி மாநில அரசு 243 வார்டுகளுக்கு இட ஒதுக்கீட்டு பட்டியலை அறிவித்தது. அதில், 126 வார்டுகள் பெண்களுக்கும், 81 வார்டுகள் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும், 28 வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கும், 4 வார்டுகள் பழங்குடியின சமூகத்திற்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் ஒரு சட்டமன்ற தொகுதியில் அனைத்து வார்டுகளும் மகளிருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டன.
மாநகராட்சி தேர்தல்
இதையடுத்து இட ஒதுக்கீடு தொடா்பாக கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் சின்னப்பா, "பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க அரசு தயாராக உள்ளது. 2 மாதங்களில் சுப்ரீம் கோர்ட்டு நெறிமுறைகளின்படி அதை உறுதி செய்வோம்" என்றார்.
கர்நாடக அரசின் இந்த வாதத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து மாநில தேர்தல் ஆணைய வக்கீல் பனீந்திரா வாதிட்டார்.
நாளை தீர்ப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர், "பெங்களூரு மாநகராட்சிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற வேண்டும்.
புள்ளி விவரங்களை வழங்கி அதன் அடிப்படையில் பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சாத்தியமா?. புதிதாக இட ஒதுக்கீட்டு பட்டியலை தயாரிக்க எவ்வளவு காலஅவகாசம் வேண்டும் என்பது குறித்து அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது" என்றார். மேலும் வழக்கின் விசாரணையை 30-ந் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தார்.