பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்
தனியார் நிலத்தில் லே-அவுட் அமைத்த விவகாரத்தில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
பெங்களூரு எச்.ஏ.எல். 4-வது ஸ்டேஜ் பகுதியில் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் லே-அவுட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தனியாருக்கு சொந்தமான நிலத்தை லே-அவுட் அமைக்க பெங்களூரு வளர்ச்சி ஆணையம் பயன்படுத்தி இருந்தது. அதாவது சீனிவாச மூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்திய பெங்களூரு வளர்ச்சி ஆணையம், அதற்கு பதிலாக அவருக்கு வளர்ச்சி அடைந்த பகுதியில் நிலத்தை ஒதுக்காமல் இருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் சீனிவாச மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், சீனிவாச மூர்த்திக்கு சொந்தமான 7 குண்டே நிலத்தில் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் லே-அவுட் அமைத்துவிட்டு, 3.5 குண்டே நிலம் மட்டுமே வழங்கி உள்ளனர். மீதி 11 குண்டே நிலம் வழங்கவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து, தனியார் நிலத்தை முறையாக கையெகப்படுத்தாமலும், சம்பந்தப்பட்ட நபருக்கு நிலத்தை வழங்காமலும் லே-அவுட் அமைத்ததற்காக பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.