பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு
சிவமொக்கா அருகே தாளகுப்பா-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவமொக்கா:
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சிவமொக்கா மாவட்டம் தாளகுப்பாவுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாளகுப்பா-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 20652) நேற்று காலை 5.15 மணிக்கு தாளகுப்பாவில் இருந்து ெபங்களூரு நோக்கி புறப்பட்டது.
அந்த ரெயில் சிவமொக்கா ரெயில் நிலையத்தை கடந்து பத்ராவதி அருகே கடதகட்டே பகுதியில் சென்று கொண்டிருந்தது.
தனியாக கழன்று ஓடியது
அந்தப்பகுதியில் சிக்னலுக்காக நின்றுவிட்டு புறப்பட்டபோது ரெயில் என்ஜின் மட்டும் தனியாக கழன்று ஓடியது. பயணிகள் இருந்த பெட்டி அப்படியே இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பயணிகள் அதிர்ச்சி அடைந்த கூச்சலிட்டனர். உடனே சுதாரித்து கொண்ட லோகோ பைலட், உடனடியாக என்ஜினை நிறுத்தினார். பின்னர் என்ஜினை பின்னோக்கி கொண்டு வந்தார்.
இதுபற்றி உடனடியாக சிவமொக்கா ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, என்ஜினுடன் ரெயில் பெட்டிகளை இணைத்தனர். இதையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
வேகத்தால் இணைப்பில் தளர்வு
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், என்ஜினுக்கும், பெட்டிகளுக்கும் இடையே உள்ள இணைப்பு கழன்றதால், என்ஜின் மட்டும் தனியாக ஓடி உள்ளது. இது அரியதாக நடக்க கூடியது. ரெயிலின் வேகத்தால் 'கப்லிங்' எனப்படும் இணைப்பில் தளர்வு ஏற்பட்டு, கழன்று இருக்கலாம். இது உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றார்.