பெங்களூரு மாநகராட்சி தேர்தலை டிசம்பருக்குள் நடத்த கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூரு மாநகராட்சி தேர்தலை டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட கர்நாடக ஐகோர்ட்டு, வார்டு இட ஒதுக்கீட்டு அரசாணையையும் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலை டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட கர்நாடக ஐகோர்ட்டு, வார்டு இட ஒதுக்கீட்டு அரசாணையையும் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு வந்த நிலையில் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. அதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் சுயேச்சைகள் ஆதரவுடன் மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால் அதன் பின்னர் பா.ஜனதா மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவியை கைப்பற்றி காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
பா.ஜனதா சார்பில் மேயராக கவுதம்குமார், துணை மேயராக ராம்மோகன் ராஜூ இருந்தனர். அவர்கள் தலைமையிலான பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலின் பதவி காலம் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. குறித்த நேரத்தில் தேர்தல் நடத்தப்படாததால் மாநகராட்சி நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டர்.
வார்டுகள் எண்ணிக்கை உயர்வு
பெங்களூரு மாநகராட்சிக்கு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்பட்டது. பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்த கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாநகராட்சிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்த 8 வாரங்களுக்கு பிறகு தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டில் வழக்கு
அந்த காலக்கெடு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. அதன்படி கர்நாடக அரசு 243 வார்டுகளுக்கு இட ஒதுக்கீட்டை அரசாணையாக பிறப்பித்தது. அதில் சில சட்டசபை தொகுதிகளில் அனைத்து வார்டுகளும் மகளிருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதை எதிர்த்து காங்கிரசை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் அப்துல் வாஜித், சிவராஜ் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மீது நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 28-ந் தேதி விசாரணை நடைபெற்றது. அன்றைய தினம், விசாரணை 30-ந் தேதிக்கு (அதாவது நேற்றைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.
இடஒதுக்கீடு அரசாணை ரத்து
அதன்படி இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர், அந்த மீது உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கர்நாடக அரசு பிறப்பித்த வார்டுகள் இட ஒதுக்கீட்டு அரசாணையை நீதிபதி ரத்து செய்தார்.
அறிவியல் பூர்வமான புள்ளி விவரங்கள் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு புதிதாக இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும் என்றும், இந்த பணிகளை வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், வார்டு இட ஒதுக்கீட்டில் உள்ள குழப்பங்களை சீராக்க 16 வாரங்கள் காலஅவகாசம் வழங்குமாறு கேட்டார். இதை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
அரசு விரும்பவில்லை
மேலும் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு மூலம் பெங்களூரு மாநகராட்சிக்கு தற்போதைக்கு தேர்தல் நடைபெறாது என்பது தெரியவந்துள்ளது. வார்டுகள் மறுவரையறைக்கு எதிரான மனுக்களை கர்நாடக ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த கர்நாடக பா.ஜனதா அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
எப்போது தேர்தல்?
காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளும் தற்போது மாநகராட்சி தேர்தல் வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் படிப்படியாக காலம் தாழ்த்தப்பட்டு சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகே மாநகராட்சி தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.