கர்நாடகாவில் திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயர் "உடையார் எக்ஸ்பிரஸ்" ஆக மாற்றம் - ரெயில்வே மந்திரி விளக்கம்!
பெங்களூரு-மைசூரு இடையேயான திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்றியமைத்ததற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
பெங்களூரு,
பெங்களூரு-மைசூரு இடையேயான திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்றியமைத்ததற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் மைசூரு - பெங்களூரு இடையே இயக்கப்படும் திப்பு எக்ஸ்பிரஸை உடையார் எக்ஸ்பிரஸாக ரெயில்வே பெயர் மாற்றியுள்ளது. அதேபோல, மைசூருவில் இருந்து தலகுப்பா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கவிஞர் குவேம்புவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெறுப்பு அரசியலின் காரணமாகவே திப்பு சுல்தானின் பெயர் மாற்றப்பட்டுள்ளது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.திப்பு எக்ஸ்பிரஸ் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்றியதற்கு முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது முஸ்லிம் ஆட்சியாளர்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தை சிதைக்கும் நோக்கில், பெயரை மாற்றி வரும் பாஜக அரசின் நடவடிக்கையின் தொடர்ச்சி என விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது.
திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்றியமைத்ததற்காக மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவுக்கு கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"மைசூர் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் மற்றும் தலகுப்பா - மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முறையே உடையார் எக்ஸ்பிரஸ் மற்றும் குவெம்பு எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு நன்றி. இது நமது செழுமையான பாரம்பரியம் மற்றும் புகழ்பெற்ற கடந்த காலத்திற்கான சரியான அங்கீகாரமாகும்" என்று கூறினார்.
மைசூரை ஆண்ட உடையார் மன்னர் ரெயில்வே கட்டமைப்பிற்கு வழங்கிய உதவியை கவுரவிக்கும் விதமாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அரசியல் இல்லை என்று மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மாநிலத்தில் ரெயில் இணைப்பை விரிவாக்க மைசூர் உடையார்கள் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. பழைய ரெயிலின் பெயரை மாற்றுவதற்கு பதிலாக புதிய ரெயிலுக்கு அவர்களின் பெயரை வைத்து உடையார்களுக்கு மரியாதை செய்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.