பெங்களூரு 2-வது முனையத்தில் 15-ந்தேதி முதல் விமானங்கள் இயக்கம்


பெங்களூரு 2-வது முனையத்தில் 15-ந்தேதி முதல் விமானங்கள் இயக்கம்
x

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 2-வது முனையத்தில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

முன்பதிவு செய்யலாம்

பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.5 ஆயிரம் கோடியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 2-வது முனையம் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி பிரதமர் மோடி அந்த முனையத்தை திறந்து வைத்தார். ஆனால் அங்கு பணிகள் முழுமையாக நிறைவடையாததால், அந்த முனையம் பாயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. அதில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. தற்போது அங்கு அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது.

15-ந்தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

இதையடுத்து அந்த புதிய முனையம் வருகிற 15-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது 2-வது முனையத்தில் இருந்து விமான போக்குவரத்து தொடங்க உள்ளது. அந்த முனையத்தில் விமான பயண டிக்கெட்டுகளை www.starair.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புதிய முனையத்தை பயன்படுத்தும் பயணிகள், கர்நாடகத்தின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் அழகான சுவர் ஓவியங்கள், பெங்களூருவின் பெருமையை பறைசாற்றும் பசுமை பூங்கா, அரண்மனை போன்ற சொகுசு வசதிகளை அனுபவித்தவாறே உள்ளே செல்ல முடியும்.

விரைவாக சோதனை

இந்த புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தால் அதில் ஆண்டுக்கு 2½ கோடி பயணிகளை கையாள முடியும். ஏற்கனவே உள்ள முனையத்தில் ஆண்டிற்கு 2 கோடி பயணிகள் வரை கையாளப்படுகிறார்கள்.

புதிய முனையத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளின் ஆவணங்கள் விரைவாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள். இதனால் அவர்களின் நேரம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story