கர்நாடகா-தமிழகம் இடையே நீர் பங்கீட்டு பிரச்சினை ஏற்படவில்லை-வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தகவல்
கர்நாடகத்தில் மழை வெள்ளத்திற்கு 127 பேர் உயிரிழந்ததாகவும், தமிழகம்-கர்நாடகம் இடையே நீர் பங்கீட்டு பிரச்சினை ஏற்படவில்லை என்றும் சட்டசபையில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
பெங்களூரு:
பிரச்சினை ஏற்படவில்லை
கர்நாடக சட்டசபையில் நேற்று மழை வெள்ள சேதங்கள் குறித்த விவாதத்திற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டன. காவிரி நீர் பங்கீட்டு விஷயத்தில் கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பியதால் இரு மாநிலங்களுக்கும் நீர் பங்கீட்டில் பிரச்சினை ஏற்படவில்லை.
தமிழகத்திற்கு கூடுதல் நீர்
நடப்பு ஆண்டில் இதுவரை தமிழகத்திற்கு 425 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. பிலிகுண்டுலுவில் உள்ள நீர் அளவீட்டு மையத்தில் இந்த தகவல் பதிவாகியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவிலும் குடிநீர் பிரச்சினை உண்டாகவில்லை. கர்நாடகத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 673 ஏரிகள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 235 ஏரிகள் நிரம்பியுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஏரிகளில் 109 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்கப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம்
நல்ல மழை காரணமாக மாநிலத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பயலுசீமே என்று சொல்லும் எப்போதும் வறட்சி ஏற்படும் மாவட்டங்களான சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர், கோலார் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு பெய்த மழையால் 45 ஆயிரத்து 465 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் 2 ஆயிரத்து 438 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்தன. மற்ற வீடுகள் தீவிரமாகவும், பாதி அளவும் சேதம் அடைந்துள்ளன.
சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. 27 ஆயிரத்து 647 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதம் அடைந்தன. 2 ஆயிரத்து 325 பாலங்கள், 269 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 ஆயிரத்து 627 வகுப்பறை கட்டிடங்கள், 5 ஆயிரத்து 194 அங்கன்வாடி மைய கட்டிடங்கள், 774 ஏரிகள், 33 ஆயிரத்து 475 மின் கம்பங்கள், 4 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் வயர்கள் சேதம் அடைந்தன. மழை வெள்ளத்திற்கு 127 பேர் உயிரிழந்தனர். 12 ஆயிரம் கால்நடைகள், 1 லட்சத்து 53 ஆயிரம் கோழிகள் இறந்தன.
பேரிடர் மீட்பு குழுக்கள்
கர்நாடகத்தில் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படும் 218 கிராமங்களில் இயற்கை பேரிடர் மீட்பு குழுக்களை அமைத்துள்ளோம். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 4 தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுக்களை அனுப்பியது. அது மட்டுமின்றி கர்நாடக பேரிடர் மீட்பு குழுக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன.
கடந்த 3 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 104 கோடி நிவாரண உதவிகள் வழங்கியுள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் மழை வெள்ளத்தால் 50 லட்சத்து 14 ஆயிரத்து 641 ஹெக்டேர் பரப்பளவில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. இவற்றுக்கு ரூ.4 ஆயிரத்து 736 கோடி நிவாரணம் வழங்கியுள்ளோம். இயற்கை பேரிடரால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரத்து 630 கோடி வழங்கியுள்ளது.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.