சிவமொக்கா- பெங்களூரு இடையே விமான போக்குவரத்து ஆகஸ்டு முதல் தொடக்கம்
சிவமொக்கா- பெங்களூரு இடையே ஆகஸ்டு மாதம் முதல் தொடங்க உள்ளது.
சிவமொக்கா-
சிவமொக்கா- பெங்களூரு இடையே விமான போக்குவரத்து ஆகஸ்டு மாதம் முதல் தொடங்க உள்ளது.
விமான நிலையம்
சிவமொக்கா அருகே சோகானே பகுதியில் ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தில் இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி இடம் பெற்றுள்ளது. இது, கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும்.
இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி எடியூரப்பாவின் 80-வது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 27-ந் தேதி திறந்து வைத்தார். ஆனால் அங்கு சில பணிகள் முடிவடையாமல் இருந்தது. இதனால் சிவமொக்கா விமான நிலையம் திறந்து 3 மாதங்கள் ஆகியும் விமான சேவை தொடங்கப்படவில்லை.
விமான சேவை தொடக்கம்
அந்த பணிகள் முடிவடைந்த பின் சிவமொக்கா-பெங்களூரு இடையே விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் விமான நிலைய பணிகள் முடிவடைந்தது. விமான போக்குவரத்துக்கான நேர கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி முதல் சிவமொக்கா விமான நிலையத்தில் சேவை தொடங்கப்பட உள்ளது. காலை 9 மணிக்கு பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் விமானம் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சிவமொக்கா விமான நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கத்தில் இருந்து மதியம் 12.மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தை சென்றடையும். இந்த விமானத்தில் 78 இருக்கைகள் உள்ளன என உப்பள்ளி விமான நிலைய அதிகாரி மனோஜ் பிரபு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதனால் சிவமொக்கா விமான நிலையத்தில் விமான சேவைக்காக காத்திருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விமான சேவை தொடங்குவதற்கு முன்பே பிரதமர் மோடி 2 முறையும், பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ளனர்.