பெங்களூருவில் பி.எப்.ஐ. அலுவலகத்தில் மெட்டல் டிடெக்டர்கள் சிக்கியது குறித்து தீவிர விசாரணை
பெங்களூருவில் உள்ள பி.எப்.ஐ. அலுவலகத்தில் மெட்டல் டிடெக்டர்கள் சிக்கியது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
2 மெட்டல் டிடெக்டர்கள் சிக்கியது
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பி.எப்.ஐ. அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். அதே நேரத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி, அந்த அமைப்பை சோ்ந்தவர்களை கைது செய்திருந்தனர். பெங்களூரு போலீசார் மட்டும் 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே நேரத்தில் பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதால், அந்த அமைப்புகளின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் பெங்களூருவில் உள்ள பி.எப்.ஐ. அலுவலகத்தில் இருந்து 2 மெட்டல் டிடெக்டர்கள் சிக்கி இருந்தது. அது கையடக்க மெட்டல் டிடெக்டர்கள் ஆகும். பொதுவாக இதனை போலீசாா் தான் பயன்படுத்துவாா்கள்.
தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
ஆனால் பி.எப்.ஐ. அமைப்பின் அலுவலகத்தில் அந்த மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டு இருந்தது எதற்காக? என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. அதுகுறித்து பெங்களூரு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த 2 மெட்டல் டிடெக்டர்களும் தடயவியல் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில், பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பின்பு அந்த அமைப்பை சோ்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணைக்கு பயந்து சிலர் பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடித்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.