பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது


பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது
x
தினத்தந்தி 30 Nov 2022 1:44 AM IST (Updated: 30 Nov 2022 1:44 AM IST)
t-max-icont-min-icon

அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது

பொதுமக்கள் கருத்து

பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டம். இது ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, டிரைவிங் லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் வாங்க மற்றும் இதுபோன்ற அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

சட்டத்திருத்தம்

அதற்காக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969-ல் திருத்தம் செய்ய உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தொடரில், அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படுவதை வைத்து, ஒருங்கிணைந்த தரவுகள் சேமிக்கும் தளம் உருவாக்கப்படும். அதில், மனித தலையீடுகள் இல்லாமல் 18 வயது பூர்த்தியான உடன் வாக்காளர் அடையாள அட்டையில் தானாகவே பெயர் சேர்க்கப்பட்டு விடும்.

அதேபோல் இறந்தவர்களின் பெயர்கள், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்ட உடன் தானாக நீக்கப்பட்டுவிடும். அதற்காக ஆஸ்பத்திரிகளில் இறப்பு சான்றிதழ்களை கட்டாயம் ஆக்குவதையும், உள்ளூர் பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் போது இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

மேலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் முறையில் வழங்கப்படும். அதே நேரத்தில் இந்த தகவல்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும் பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

பொதுமக்கள் கருத்து

பிறப்பு, இறப்புகளை பதிவிடும் முறை தற்போது நடைமுறையில் இருந்தாலும், சான்றிதழ்களை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து சமூக ஆர்வலர், பொதுமக்கள், அதிகாரிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

முதல் அங்கீகாரம், பிறப்பு சான்றிதழ்

பெங்களூரு ராயபுரம் பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலரான கேத்தரின் கூறுகையில், "பிறப்பு, இறப்பு சான்றிதழ் மக்களுக்கு தேவையான ஒன்று. ஒரு குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரம் பிறப்பு சான்றிதழ் தான். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முதலில் தேவைப்படுவது பிறப்பு சான்றிதழ். குழந்தை வீட்டில் பிறந்தாலும் சரி. குழந்தைக்கு கட்டாயம் பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டும். எங்கு சென்றாலும் முதலில் கேட்பது பிறப்பு சான்றிதழ் தான். ஒரு விபத்தில் யாராவது இறந்து போனால் அவர்கள் இன்சூரன்ஸ் பணம் வாங்குவதற்கு இறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் இல்லாவிட்டால் அதிக சட்டவிரோத சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வாங்குவதுடன், அதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்" என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெங்களூரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒபினா கூறுகையில், "பிறப்பு சான்றிதழ் குழந்தைகளை பள்ளிக்கு சேர்க்க கண்டிப்பாக தேவைப்படுகிறது. பள்ளியில் குழந்தைகள் ஊக்கத்தொகை பெற வேண்டும் என்றாலும் கூட முதலில் பிறப்பு சான்றிதழ் தான் கேட்கிறார்கள். குழந்தைகள் பிறந்த உடனேயே பிறப்பு சான்றிதழ் வாங்குவதை கட்டாயம் ஆக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஒரு குடும்பத்தில் வயதானவர் ஒருவர் இறந்து விட்டால் அவர் பெயரில் உள்ள சொத்துகளை பிள்ளைகள் பெயரில் மாற்ற இறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டாயம் அவசியம். அதை வாங்குவதில் மக்கள் அலட்சியம் காட்ட கூடாது. வாக்காளர் அடையாள அட்டை, வேலைவாய்ப்பு, பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு, பாஸ்போர்ட் வாங்குவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது தான்" என்றார்.

சிரமம் இல்லாமல் பதிவு செய்ய...

சிவமொக்காவில் வசித்து வரும் வியாபாரியான வெங்கடேஷ் கூறுகையில், "ஏழையோ, பணக்காரரோ யாராக இருந்தாலும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்குவது அவசியம். பிறப்பு சான்றிதழ் இருந்தால் தான் ஆதார் அட்டை பெறுவது எளிதாகிறது. அந்த ஆதார் அட்டையை பயன்படுத்தி தான் அரசின் சலுகைகள் பெற முடியும். கிராமத்தில் ஒருவர் பிறந்தாலும் அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பிறப்பு பதிவு சான்றிதழ் பெறலாம். மேலும் அங்குள்ள இறப்பு அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெறலாம். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசின் பல்வேறு சலுகைகள் பெற உதவியாக உள்ளது. கிராமப்புறங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் உடனடியாக கிடைத்து விடுகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் தாமதமாக தான் தருகிறார்கள். சான்றிதழ்களை உடனடியாக கொடுத்துவிட்டால் நன்றாக இருக்கும். பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவு செய்வது கட்டாயம் என்பது நல்ல முடிவு. ஆனால் மக்கள் சிரமம் இல்லாமல் அவற்றை பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

வெளிமாநில மக்கள்...

மங்களூரு கத்ரியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் கூறுகையில், "பிறப்பு, இறப்பு சான்றிதழ் இரண்டும் அவசியம் தான். ஆனால் மக்களுக்கு இந்த சான்றிதழ்களை எப்படி வாங்குவது என்பது தெரியாமல் உள்ளது. சான்றிதழ்களை வாங்கும் முறையை சற்று எளிமைப்படுத்த வேண்டும். என்னை பொறுத்தவரை பிறப்பு சான்றிதழ் வாங்குவது மிகவும் கஷ்டமாக உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களிடம் எந்த ஆவணங்களும் இருக்காது. ஆனால் அந்த மக்களிடம் சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்று கூறி மனஉளைச்சலுக்கு ஆளாக்க கூடாது. இவற்றை களைய வேண்டும். மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவது கட்டாயம் ஆக்கலாம். இதற்காக மக்களை அலைக்கழிக்க கூடாது" என்றார்.

மங்களூரு ஆழ்வார்ஸ் ரோட்டில் வசித்து வரும் வேலுச்சாமி கூறுகையில், "பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்குவது ஒரு சிலருக்கு கஷ்டமாக தான் உள்ளது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் மங்களூருவுக்கு வந்து வேலை செய்கிறார்கள். பின்னர் தமிழ்நாட்டிற்கு சென்று விடுகிறார்கள். வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மங்களூருவில் குழந்தை பிறந்த பின்னர் அந்த பெண் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டால், 2 ஆண்டுகள் கழித்து வந்து பிறப்பு சான்றிதழ் கேட்டால் அதிகாரிகள் அலைய வைக்கின்றனர். இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மக்கள் கைக்கு எளிதாக கிடைக்க அரசுகள் நடவடிக்ை எடுக்க வேண்டும்" என்றார்.

தனி அலுவலகம் செயல்படுகிறது

பெங்களூருவை சேர்ந்த ஆஷா

ஊழியரான பரிமளா கூறுகையில், "பிறப்பு, இறப்பு சான்றிதழ் என்பது அவசியம், கட்டாயம். அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கேயே பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பிறப்பு சான்றிதழ் பெற்று விடலாம் என்று கூறுகிறார்கள். பிறப்பு, இறப்பு சான்றிதழை வாங்குவதோடு இல்லாமல், அதனை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்பது நல்ல முடிவு" என்றார்.

பெங்களூரு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெங்களூருவை பொறுத்தவரை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு செய்ய தனி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற்று செல்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தாலோ அல்லது ஒருவர் இறந்தாலோ அந்த மருத்துவமனை நிர்வாகம் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பிறப்பு அல்லது இறப்பு சான்றிதழை வழங்குவார்கள். தினமும் ஏராளமானோர் பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவு செய்ய வருகை தருகிறார்கள். மேலும் பெங்களூரு ஒன் மற்றும் ஆன்-லைனிலும் பிறப்பு, இறப்பை பதிவு செய்யலாம்" என்றார்.

இந்தியாவில் பிறப்பும் இறப்பும்

சமீபத்திய தகவலின்படி, இந்தியாவில் ஒரு வருடத்துக்கு சராசரியாக 2 கோடியே 69 லட்சத்து 32 ஆயிரத்து 586 பிறப்பு நிகழ்கிறது. பிறப்பு விகிதம் 17.163 சதவீதம் (ஆயிரம் பேருக்கு) ஆக இருக்கிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 73 ஆயிரத்து 787 பேரும், ஒரு மணி நேரத்துக்கு 3 ஆயிரத்து 74 பேரும், ஒரு நிமிடத்துக்கு 51 பேரும் பூமியில் புதிதாக அவதரிக்கிறார்கள்.

அதேபோல, இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 97 லட்சத்து 78 ஆயிரத்து 73 இறப்புகள் நிகழ்கிறது. இறப்பு விகிதம் 7.3 சதவீதம் (ஆயிரம் பேருக்கு) ஆக உள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 26 ஆயிரத்து 789 பேரும், ஒரு மணி நேரத்துக்கு 1,116 பேரும், ஒரு நிமிடத்துக்கு 19 பேரும் இந்த பூலோக வாழ்வை நீத்து, உயிர் துறக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய மக்கள் தொகையைவிட இந்தியாவில் ஓர் ஆண்டில் பிறப்பவர் எண்ணிக்கை அதிகம் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 800 கோடியை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அதில், இந்தியாவினுடைய பங்களிப்பு மட்டும் 141 கோடியே 20 லட்சத்தையும் தாண்டி நிற்காமல் செல்கிறது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி, ஆஸ்திரேலிய நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 57 லட்சம் ஆகும். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சராசரியாக 2 கோடியே 69 லட்சம் பேர் புதிதாக பிறக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையை விடவும், இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு பிறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

சட்டம் என்ன சொல்கிறது?

மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து, நாட்டில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பிறப்பு மற்றும் இறப்பு விவரங்கள் முக்கியமானதாகும். இதற்காக, மத்திய அரசு கடந்த 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்பு பதிவு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி 2000-ம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் உருவாக்கப்பட்டன. அதில், கடந்த 2017-ம் ஆண்டு சில திருத்தங்களும் செய்யப்பட்டன. அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு நடந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் கிடையாது.

22-வது நாள் முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்வதற்கு தாமத கட்டணம் ரூ.100-ம், 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்வதற்கு ரூ.200-ம், ஓராண்டுக்கு மேல் பதிவதற்கு ரூ.500-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும், கூடுதல் நகலுக்கு தலா ரூ.200-ம் கட்டணமாக உள்ளது.


Next Story