மங்களூரு மாநகராட்சியை மீண்டும் பா.ஜனதா கைப்பற்றியது

மங்களூரு மாநகராட்சியில் 4-வது தவணை தேர்தல் நடந்தது. இதில் மங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது.
மங்களூரு-
மங்களூரு மாநகராட்சியில் 4-வது தவணை தேர்தல் நடந்தது. இதில் மங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது. மேயராக சுதிர் ஷெட்டியும், துணை மேயராக சுனிதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மங்களூரு மாநகராட்சி
கர்நாடகத்தின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் மங்களூரு நகர் அமைந்துள்ளது. மாநிலத்தில் முக்கிய மாநகராட்சிகளில் மங்களூரு மாநகராட்சியும் ஒன்று. 60 உறுப்பினர்களை கொண்ட மங்களூரு மாநகராட்சிக்கு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா 44 வார்டுகளிலும், காங்கிரஸ் 14 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ. 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
இதனால் மங்களூரு மாநகராட்சி பா.ஜனதா வசம் சென்றது. ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 3 தவணைகளாக பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் மேயர் மற்றும் துணை மேயராக பதவி வகித்து வந்தனர்.
பா.ஜனதா வெற்றி
இந்த நிலையில், 3-வது தவணை மேயர், துணை மேயர் பதவி காலம் முடிவடைந்த நிலையில், 4-வது தவணை மேயர், துணை மேயரை தேர்ந்தெடுக்க 8-ந்தேதி (நேற்று) தேர்தல் நடக்கும் என்று மண்டல ஆணையரான தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிவித்தார். மேயர் பதவி பொது பிரிவினருக்கும், துணை மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் ஒதுக்கப்பட்டது. மங்களூரு மாநகராட்சி அரங்கத்தில் நேற்று மதியம் 12 மணி அளவில் மேயர், துணை ேமயர் தேர்தல் நடந்தது.
இதில் பா.ஜனதா சார்பில் மேயர் பதவிக்கு ெகாடியல்பைல் வார்டு உறுப்பினர் சுதிர் ஷெட்டியும், காங்கிரஸ் சார்பில் நவீனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். கைகளை உயர்த்துவதன் மூலம் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக 44 உறுப்பினர்களும், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக 14 உறுப்பினர்களும் கைகைளை உயர்த்தினர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் யாருக்கும் வாக்களிக்கவில்லை. இதனால், பா.ஜனதா உறுப்பினர் சுதிர் ஷெட்டி வெற்றி பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல், துணை மேயர் பதவிக்கு பனம்பூர் வார்டு உறுப்பினர் சுனிதா வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாழ்த்து
இதனை தேர்தல் நடத்தும் அதிகாரியான மண்டல கமிஷனர் பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் மங்களூரு மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து மண்டல கமிஷனர் பிரகாஷ், புதிய மேயர் மற்றும் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுதிர் ஷெட்டி, சுனிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் உறுப்பினர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் 2 பேரும் அடுத்த ஓராண்டுக்கு மேயர் மற்றும் துணை மேயராக பதவி வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.