சித்தராமையாவுக்கு எதிராக லோக்அயுக்தாவில் பா.ஜனதா புகார்


சித்தராமையாவுக்கு எதிராக லோக்அயுக்தாவில் பா.ஜனதா புகார்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து சித்தராமையாவுக்கு எதிராக லோக்அயுக்தாவில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது.

பெங்களூரு:

40 சதவீத கமிஷன்

பா.ஜனதாவின் ஆதிதிராவிடர் அணி தலைவர் சலவாதி நாராயணசாமி எம்.எல்.சி. நேற்று பெங்களூருவில் உள்ள லோக்அயுக்தா அலுவலகத்தில் ஒரு புகாரை வழங்கினார். அதில் சித்தராமையா, பா.ஜனதா அரசு மீது உரிய ஆதாரங்கள் இன்றி 40 சதவீத கமிஷன் குறித்து புகார் கூறி வருவதாகவும், இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்குமாறும் அவர் கோரியுள்ளார். இந்த புகாரை அளித்த பிறகு சலவாதி நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் எங்கள் பா.ஜனதா அரசு மீது சித்தராமையா தொடர்ந்து 40 சதவீத கமிஷன் புகாரை கூறி வருகிறார். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால் அவருக்கு எதிராக லோக்அயுக்தாவில் புகார் அளித்துள்ளோம். நாங்கள் கொடுத்த புகாரை லோக்அயுக்தா நீதிபதி ஏற்று கொண்டுள்ளார். கூடுதல் தகவல்கள் வேண்டுமென்றால் தொலைபேசி வாயிலாக பெற்று கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆதாரம் இல்லை

இதுகுறித்து சித்தராமையாவுக்கு நோட்டீசு அனுப்புவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் சித்தராமையா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும் புகார் கூறியுள்ளோம். அதற்கான ஆவணங்களையும் கொடுத்துள்ளோம். எங்களுக்கு எதிராக ஏதாவது ஆதாரங்கள் இருந்தால், லோக்அயுக்தாவில் சித்தராமையா புகார் கொடுக்க வேண்டியது தானே. ஏனெனில் அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை.

வீதியில் நின்று கொண்டு அரசு மீது ஊழல் புகார் கூறுவதை சித்தராமையா நிறுத்த வேண்டும். அவர் அரிச்சந்திரனை போல் பேசுகிறார். ஆனால் அவரது ஆட்சி காலத்தில் ஏராமளான ஊழல்கள் நடந்துள்ளதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சலவாதி நாராயணசாமி கூறினார்.


Next Story